egg masala: தினசரி புரத தேவையை நிறைவு செய்யும் முட்டை மசாலா: இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொடுக்கும் மலிவாகவும் கிடைக்கும் உணவுப்பொருட்களின் பட்டியலில் முட்டை தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிடுகின்றது.
ஆரோக்கிய பலன்களை கணிப்பதற்கு முன்பு சுவையின் அடிப்படையில் பார்த்தோமானால், முட்டையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றமை அனைவரும் அறிந்ததே.
அவித்த முட்டை, முட்டை பொறியல், ஆம்லெட், ஆஃப்பாயில், புல்ஃபாயில், முட்டை மாஸ் என்று வெவ்வேறு வகைகளிலும் முட்டையை சமைக்ககூடியதாக இருக்கும்.
அந்த வகையில் நாவூரும் சுவையில் முட்டை மசாலாவை எப்படி எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3/4 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 2 (இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 தே.கரண்டி
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கறி மசாலா தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
முட்டை - 5-7
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் தேவையான முட்டைகளை வேக வைத்து ஓடுநீக்கி, முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து, துண்டுகளாக்கி, மஞ்சள் கருவையும் பிரித்து தனியாகவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்த்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை போட்டு தேவையானளவு உப்பு தூவி, வெங்காயத்தின் நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் அதனுடன் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கறி மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறிவிட்டு 1/2 கப் அளவுக்கு தண்ணீ்ர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரையில் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து துண்டுகளாக்கிய முட்டைகளை சேர்த்து, அத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை முழுமையாக சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஓரிரு நிமிடங்கள் வேக விட்டு, இறுதியில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அவ்வளவு தான் சுவை நிறைந்த முட்டை மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
