மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி: கசப்பே இல்லாமல் எப்படி செய்வது?
பொதுவாக இந்திய சமையலில் கறிவேப்பிலை முக்கிய இடம் வகிக்கின்றது. அதனை சமயலில் பெரும்பாலானவர்கள் வாசனைக்காகவே பயன்படுத்துகின்றார்கள்.
ஆனால் கறிவேப்பிலையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது.
கறிவேப்பிலையின் சத்துக்களில் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் உள்ளன. கறிவேப்பிலை பார்வையை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
அவை கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும், எலும்பு ஆரோக்கியம், இரத்த ஓட்டம் மற்றும் பலவற்றிற்கு அவசியம்.
முடிவளர்ச்சி முதல் நீரிழிவு நோய் வரையில் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இந்த கறிவேப்பிலையை கொண்டு எவ்வாறு அசத்தல் சுவையில் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
வர மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/2 தே.கரண்டி
புளி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நன்றாக சுத்தம் செய்து கழுவிய கறிவேப்பிலையை சேர்த்து நன்று வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்துவிட்டு, சிறிய துண்டு புளியையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அதனையடுத்து ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்தால் அவ்வளவு தான், அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
