உடல் எடையை குறைக்க சத்தான காலை உணவு! செய்வது சுலபம்
பொதுவாக உடல் எடையை குறைக்கும் பொழுது காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைவான உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை கடைபிடிப்பது மிகவும் தவறானது.
இதனால் உடல் எடை குறைந்தாலும், இது நிரந்தர பலன் தராமல் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
உடல் எடை குறைய சத்தான காலை உணவான இந்த ஓட்ஸ் குயினோவா கிச்சடியை செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த சத்தான காலை உணவை எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் - 1/4 கப்
- குயினோவா - 1/4 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- அரிசி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பூண்டு 3-5
- இஞ்சி - சிறிய துண்டு
- பட்டை - 1
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பச்சை மிளகாய் 3-5
- தக்காளி - 1
- மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- மஞ்சள் பொடி - ¼ ஸ்பூன்
- காய்கறிகள் - 1 கப்
செய்முறை
முதலில் ஓட்ஸ், குயினோவா, அரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக 2 முறை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து ஒரு குக்கரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கிய தக்காளியுடன் கேரட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கேப்ஸிகம், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகளை 1கப் பயன்படுத்தலாம்.
காய்கறிகளை லேசாக வதக்கிய பின் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கும் பொழுது ஊற வைத்துள்ள ஓட்ஸ், குயினோவா, அரிசி மற்றும் பாசி பருப்பை வடித்து அதில் போட்டு கிளறவும்.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்தபின் குக்கரை மூடி 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
பிரஷர் அடங்கிய பிறகு மிளகுப்பொடி மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் தள் எடையை குறைக்கும் சத்தான ஓட்ஸ் குயினோவா கிச்சடி தயார்.