ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும் பாகற்காய் பொரியல்... கசப்பே தெரியாம எப்படி செய்வது?
பொதுவாகவே பாகற்காய் என்றால் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் பிடிக்காது. ஆனால் இந்த காயில் அளப்பரிய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் செறிந்துள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். இது குடல் புழுக்களை இயற்கை முறையில் அழிப்பதற்கும் உதவுகின்றது.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த பாகற்காயை பெரும்பாலானவர்கள் வெறுப்பதற்கு முக்கிய காரணம் அதன் கசப்பு தன்மை தான். கொஞ்சமும் கசப்பின்றி எவ்வாறு பாகற்காய் பொரியல் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பாகற்காய் - 250 கிராம்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் -1
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
சாம்பார் மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி -1 மேசைக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாகற்காயின் மேலுள்ள தோலை அகற்றிவிட்டு உப்பு தண்ணீரில் போட்டு குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
அதனையடுத்து பாகற்காயை நல்ல தண்ணீரில் கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணைய் ஊற்றி சூடானதும், வெங்காயம் போட்டு பொன்நிறமான வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு இடித்த பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்க வேண்டும், பின்னர் அதனுடன் பாகற்காயை சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் நன்றான மூடி வேகவிட வேண்டும்.
அதனையடுத்து உப்பு, மஞ்சள் தூள்,காஷ்மீரி மிளகாய் தூள், சாம்பார் மிளகாய் தூள், சாம்பார் பொடி தேவையான மசாலாக்களை சேர்த்து நன்றாக வத்தவிட்டு வெல்லம் சேர்து 5 நிமிடம் வேக வைத்து இறுதியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் பாகற்காய் பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |