பத்தே நிமிடத்தில் ஆரோக்கியமான ஓட்ஸ் கார பணியாரம் எப்படி செய்வது?
வீட்டில் ஏதாவது ஒரு உணவு சிற்றுண்டி போல செய்வது வழக்கம். அப்படி செய்யும் போது வித்தியாசமான முறையில் உவை செய்வது மகிழ்ச்சியை கொடுக்கக்கூடியது. ஓட்ஸ் என்பது வெறுமையாக சாப்பிடுவதை விட அதில் ஒரு விதமான கார பணியாரம் செய்யலாம்.
ஓட்ஸ் என்ற முழுதானிய உணவுகள், சர்வதேச அளவில் பெரும்பாலானோரால், விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது. இது கோதுமை போன்றதொரு முழு தானியம் ஆகும். முழு தானிய வடிவில், இது குதிரைகளுக்கு உணவாக பயன்படுகிறது. இதை நன்றாக இடித்து, பதப்படுத்தினால் அது மனிதர்களுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது.
ஓட்ஸ் தற்போது பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுகிறது. ஓட்ஸ் உணவை கொண்டு இட்லி, தோசைகள், ஊத்தப்பம்கள், குக்கீஸ், கேக்குகள், ஸ்மூத்திகள் உள்ளிட்டவைகளை தயாரிக்க பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
- Instant Oats - 1 கப்
- அரிசி மாவு - ¼ கப்
- கெட்டி தயிர் - ½ கப்
- பெரிய வெங்காயம் - 1
- கேரட் - 1
- பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
- கடுகு - ½ டீஸ்பூன்
- சீரகம் - ½ டீஸ்பூன்
- பெருங்காய தூள் - ¼ டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் ஓட்ஸை போட்டு 4-5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் அதன் நிறம் மாறாமல் நறுமணம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதன் பின்னர் ஓட்ஸ் நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் சலித்த அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
இதனுடன் அதில் கெட்டியான புதிய தயிரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு தயாரிக்கவும். பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டுக்கொள்ளவும்.
கடுகு வெடித்ததும் பெருங்காய தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் துருவிய கேரட்டை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். வெங்காயம் மற்றும் கேரட் மென்மையாக வதங்கியவுடன் அவற்றை அப்படியே தயார் செய்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளவும்.
பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை போட்டு நன்றாக கலக்கவும். இந்த மாவை குறைந்தது 15 நிமிடங்களுக்கு மூடி ஊற வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு கெட்டியாக மாறியிருக்கும் எனவே தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் பணியாரம் சுடும் இரும்பு பாத்திரத்தை வைத்து ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதற்கிடையே பணியார மாவில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
தற்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் பணியார மாவை ஊற்றவும். குறைந்த தீயில் 3-4 நிமிடங்கள் பணியாரத்தை வேகவிடவும். ஒருபுறம் பொன்னிறமாக மாறியவுடன் அதை மெதுவாக சுற்றி பிரட்டி போடவும். இருபுறமும் நன்கு பொன்னிறமாக மாறி வெந்தவுடன் எடுத்து அனைவருக்கும் சூடாக பரிமாறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |