kummayam: எலும்புகளை வலுவாக்கும் கும்மாயம்: பாரம்பரிய முறையில் எப்படி செய்வது?
நமது முன்னோர்களின் உணவு முறை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பழக்கங்களே அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தமைக்கும் முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.
அந்த வகையில் பெண் பிள்ளைகளின் எலும்பை வலுப்படுத்தவும் மாதவிடாய் காலத்தில் அவர்களின் உடல் வலியை குறைத்து ஆரோக்கியமாக இருக்கவும் கும்மாயம் என்ற ஒரு இனிப்பு மிகவும் பிரபல்யமாக இருந்துள்ளது.
அதோடு இந்த இனிப்பை பெண்கள் பருவமடையும் போதும் செய்து கொடுப்பார்கள். ஏனெனில் இதில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும். இது உளுந்து, பாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்புப் பலகாரமாகும்.
குறிப்பாக பெண்பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த கும்மாயத்தை எளிமையாக எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து - 1 கப்
பாசி பருப்பு- 1/4 கப்
பச்சரிசி -1/4 கப்
கப் நெய் அல்லது நல்லெண்ணை-1/4 கப்
ஏலக்காய்- 2
வெல்லம்- 200 கிராம்
தண்ணீர் -ஒரு கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் பனை வெல்லத்தை எடுத்து, அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை நன்கு கரைய வைத்து இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே பாத்திரத்தில் பச்சரிசியை சேர்த்து நன்கு வறுத்து, அதையும் தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் பாசிப் பருப்பையும் பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்து எடுத்தால் கும்மாயம் செய்வதற்கான மாவு தயார்.
அதனையடுத்து,அடுத்து தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகுவில் அரைத்தமாவை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாதவாறு நன்கு கிளற வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில், இந்த மாவை ஊற்றி குறைவான தீயில் வைத்து கட்டிகள் சேராதவாறு நன்கு கிளற வேண்டும்.
அப்படி கிளறும் போது சிறிது நெய்யை அவ்வப்போது ஊற்றி கிளற வேண்டும். மாவானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
மாவானது கையில் ஒட்டாமல் இருக்கும் நிலையில் கும்மாயம் தயார். அதை இறக்கி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறலாம். எலும்பை வலுவாக்குவதில் இந்த கும்மாயத்தின் பங்கு அளப்பரியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |