கர்பிணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலக்கீரை கூட்டு...
பாலக்கீரையில்போலிக் அமிலம் செறிந்து காணப்படுவதால், கர்பிணிகள் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. பாலூட்டும் தாய்மார்களும் இதனை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது.
பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாகவும் உருதியாகவும் வைத்துககொள்ள பெரிதும் துணைப்புரிகின்றது.
இந்த கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் பாதுகாப்பு கொடுக்கின்றது.
பாலக்கீரையில் அதிகமாக பொட்டாசியம் இருப்பதால், நரம்பு மண்டலத்தை வலுவூட்டுவதுடன், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளவும் உமவுகின்றது.
மேலும் பாலக் கீரையானது புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. இவ்வளவு மருத்துவ குணங்கள் அடங்கிய பாலக்கீரையை கொண்டு செட்டி நாட்டு பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு கூட்டு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
தக்காளி - 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 8 பல் (தட்டிக் கொள்ளவும்)
வரமிளகாய் - 2
சாம்பார் தூள் - 1 1/2 தே.கரண்டி
பாலக் கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - சிறிளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் இரண்டு முறை நன்றாக கழுவி பின்னரை் குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பருப்புடன் தக்காளி, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அவை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து மூடி 4 விசில் வரையில் வேகவிட்டுக்கொள்ள வேண்டும்.
விசில் போனதன் பின்னர் பருப்பை நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து .பொன்நிறமாக மாறும் வரையில் வதக்கி, பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக கிளறிவிட்டு பின்னர் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி தேவையான அளவு சிறிது நீரை ஊற்றி கலந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட்டு இறக்கினால், அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பாலக்கீரை கூட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |