தங்க நகையில் ஹால்மார்க் முக்கியமா? குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு இதோ விளக்கம்
பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆபரணத் தங்கத்தினை குறித்து பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், மக்கள் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
ஹால்மார்க் என்றால் என்ன?
ஆம் தங்கம் என்பது பெண்களை அழகு படுத்துவது மட்டுமில்லாமல், பணம் தேவைப்படும் போது மற்றவர்களை எதிர்பார்க்காமல் அடமானம் என்ற பெயரில் நகையை வைத்து பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனால் தங்கம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்கள் தங்க நகைகளை விரும்பி அணிவதுடன், அதிகமாக சேர்த்து வைப்பதையும் விரும்புகின்றனர்.
இவ்வாறு பாமர மக்களின் உதவிக்கரமாக செயல்படும் தங்கம் குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நாம் வாங்கும் தங்கம் உண்மையிலேயே நல்ல தங்கம் தானா? என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.
இதற்காக தற்போது வந்துள்ளது தான் ஹால்மார்க் சட்ட திட்டம். இவை ஏற்கனவே இருந்து வந்தாலும் வரும் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முன்பு 4 இலக்க எண்ணை கொண்ட ஹால்மார்க் நகைகள் தற்போது 6 இலக்க எண்களில் வெளி வர இருக்கின்றது.
இவ்வாறு 6 இலக்க எண் இருந்தால் மட்டுமே அரசு அனுமதித்திருக்கும் சட்டத்திற்கு உட்பட்ட கலவையில் செய்யப்பட்ட நகை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நுகர்வோர் அதிகாரி கூறுவது என்ன?
தங்கம் வாங்குபவர்கள் வரும் 1ம் தேதி முதல் நகைகளில் 6 இலக்க ஹால்மார்க் எண் இருக்கவும் அல்லது யுஐ (Unique Identification) இருக்க வேண்டும். ஆனால் நான்கு இலக்க எண் கொண்ட ஹால்மார்க் நகைகளை வைத்திருப்பவர்கள் பயப்பட தேவையில்லை.
இதனை விற்கவும் செய்யலாம். ஆனால் கடைகாரர்களிடம் இனி வாங்கும் போது 6 இலக்க எண் கொண்ட நகைகளை மட்டுமே வாங்குவது சிறந்ததாகும்.
ஏனெனில் ஹால்மார்க் எண் கொண்ட நகைகள் மட்டுமே மறுவிற்பனையின் போது அதிக மதிப்பினை வழங்குவதுடன், தங்கத்தின் தரத்தினையும், தூய்மையையும் உறுதி செய்யவும் செய்கின்றது.
ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் இல்லாத நகையினை விற்பனை செய்தால் நகையின் விலையை விட ஐந்து மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இருப்பினும், நகைக்கடைக்காரர்கள் நுகர்வோரிடமிருந்து ஹால்மார்க் இல்லாமல் பழைய தங்க நகைகளை திரும்ப வாங்கலாம். யார் வேண்டுமானாலும், ஏற்கனவே உள்ள நகைகளை ஹால்மார்க் செய்து தங்கத்தின் உண்மையான மதிப்பீட்டைப் பெறலாம்.
ஹால்மார்க் எண் கொண்ட நகைகளை மறுவிற்பனை அல்லது பரிமாற்றம் செய்யும்போது அதிக மதிப்பை வழங்குகிறது. வாங்கும் தங்கத்தின் தூய்மையையும், தரத்தையும் உறுதி செய்கிறது.