மறைந்த கே.கே.வி உடல் தகனம் - கண்ணீர் விட்ட திரையுலகினர்கள்
பிரபல பின்னணிப் பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத்(53) மாரடைப்பு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றது. தமிழ் சினிமாவில் 66-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அதில் காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.
இந்நிலையில், நேற்று கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டு இருந்த பாடகர் கே.கே.வின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், கே. கே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.
மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர்கள் மற்றும் இசைத்துறை சகாக்கள் இறுதிச் சடங்கிற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.