பழங்களை எப்படி சாப்பிடவேண்டும்: வைத்தியர் கூறும் ஆலோசனை
பொதுவாகவே நாம் தினமும் ஏதாவது ஒரு பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அவை எம்மை சில நோய்களிலிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கின்றது.
ஆனால் நாம் உண்ணும் பழங்களை எவ்வாறு சாப்பிடுகிறோம் என்பதில் தான் அதன் ஆரோக்கியத்தன்மை அமைந்திருக்கிறது.
அந்த வகையில் பழங்களை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது குறித்து வைத்தியர் பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா கூறும் தகவல்களை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
எது நல்லது?
தினமும் பழங்கள் சாப்பிடுவதும் பழச்சாறு அருந்துவதும் நல்ல பழக்கமென்று தொடர்ந்து வருபவர்கள் நம்மில் அநேகர் உண்டு பழங்களை ஏன் நமக்குப் பிடித்திருக்கிறது? ஏன் பழச்சாறுகளை நமக்குப் பிடித்திருக்கிறது?
மனிதன் - தொன்மை காலந்தொட்டு காட்டில் விளைந்த பழங்களைக் கொய்து உண்டு வந்தவன் தான் ஆயினும் பண்டைய காலங்களில் விளைந்த பழங்களுக்கும் தற்போது கிடைக்கும் பழங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
கடினமானதாகவும் இனிப்பு சுவை குறைந்ததாகவும் இருந்த பழங்களை மனிதன் தனது நாவின் தேவைக்கு ஏற்ப மிருதுவானதாகவும் இனிப்பு சுவை மிக்கதாகவும் மாற்றி வளரச்செய்தான் இப்போது கிடைக்கும் பழங்களில் பெரும்பான்மையினருக்குப் பிடித்த பழங்கள் மூன்றை குறிப்பிடுமாறு கூறினால் அந்த மூன்று பழங்களுமே இனிப்பு சுவை நிறைந்த மா, பலா, வாழை,மாதுளை, ஆப்பிள் என்று தான் கூறுவார்கள்.
காரணம்
பழங்களில் நமக்குப் பிடித்தது என்பது அவற்றில் உள்ள விட்டமின்கள், மினரல்கள் என்பதைத் தாண்டி அவற்றின் "இனிப்பு" சுவை தான். ஆப்பிள் , மா , பலா போன்றவை கசப்பு சுவை தருபவனாக இருந்தால் அதை சந்தையில் சீண்டுவார் இருக்காது.
மனிதனின் மூளை இனிப்புக்கு அடிமை என்பதைப் புரிந்து கொண்டு மேலும் மேலும் இனிப்பு சுவை அதிகமாகக் கிடைக்குமாறு பழங்களை மாற்றியதும் மனிதன் தான்.
பழங்களில் ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய மாவுச்சத்துகள் உள்ளன. ஃப்ரக்டோஸ் என்பது ரத்தத்தில் கலந்தாலும் சுக்ரோஸ் மற்றும் க்ளூகோஸ் அளவு. இன்சுலினைத் தூண்டும் சக்தி அதற்குக் கிடையாது.
ஆயினும் ஃப்ரக்டோசின் செரிமானத்திற்கு கல்லீரலின் பங்கு தேவை. சுக்ரோஸ் = க்ளூகோஸ் + ஃப்ரக்டோஸ் இனிப்பு சுவை கூடக் கூட ஃப்ரக்டோஸ் குறைவாகவும் சுக்ரோஸ் அதிகமாகவும் அந்த பழத்தில் இருக்கும்.
பழங்கள் சாப்பிட்டாலும் ரத்த க்ளூகோஸ் அளவுகள் கூடுவதும் அதனால் டயாபடிஸ் கண்ட்ரோல் இல்லாமல் போவதும் இதனால் தான். இதுவே காயாக உண்ணும் போது சுக்ரோஸ் மிகக்குறைவாக இருக்கும். அதனால் ரத்த க்ளூகோஸ் அளவுகள் பெரிதாக ஏறாது.
எனவே டயாபடிஸ் மக்களுக்கு கனியை விட காய்களே சிறந்தவை. இன்னும் பலர் பழங்களை சாப்பிடாமல் சாறாக ஆக்கி தினமும் அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளனர்.
இதன் மூலம் அதிகமான சுக்ரோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் தினசரி கிடைத்துக் கொண்டே இருக்கும் இன்சுலின் அதிகமாக சுரந்து ரத்தத்தில் அதிகமாக இன்சுலின் இருப்பின் (Hyper insulinemia) இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் தன்மை தோன்றும்.
அப்போது பழங்கள் மூலம் உள்ளே செல்லும் ஃப்ரக்டோஸ் கூட கல்லீரலில் கொழுப்பாக மாறி கல்லீரலிலேயே சேமிக்கப்படும். இதனால் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் (NON ALCOHOLIC FATTY LIVER DISEASE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பழச்சாறு
பழங்களை வெறுமனே சாறாக்கிப் பருகாமல் கூட மூன்று முதல் நான்கு கரண்டி சீனி / நாட்டு சர்க்கரை போன்றவை கலந்து பருகப்படுகிறது.
சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி / தேன் ஆகிய அனைத்திலும் கூடவோ சற்று கம்மியாகவோ இருப்பது சுக்ரோஸ் தான். இப்படியாக ஏற்கனவே சுக்ரோஸும் ஃப்ரக்டோஸும் கலந்த கலவையில் மேற்கொண்டு சுக்ரோஸைக் கலந்து பருகுவதால் நன்மையை விட தீமையே அதிகம் ஏற்படும் என்பது திண்ணம்.
மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பழச்சாறுகள் அதிலும் இனிப்பு கலந்து பருகும் கலாச்சாரம் பிரசித்தி பெற்றது அதன் விளைவாக அங்கே சிறார் சிறுமிகளிடத்திலும் கல்லீரல் கொழுப்பு படியும் நோய் சாதாரணமாகிவிட்டது கிளினிக்கில் எனது சிறு அனுபவத்தில் கூட சிறார்களின் ஸ்கேன்களில் கல்லீரல் கொழுப்பு படியும் நோய் தென்படுவதைக் கண்டு வருகிறேன்.
கார்பனேட்டட் குளிர்பானங்களைக் காட்டிலும் ஃப்ரெஷ் ஜூஸ்கள் நல்லது ஃப்ரெஷ் ஜூஸ்களைக் காட்டிலும் அந்த பழங்களை மென்று தின்பது நல்லது.
அதிலும் சிறு பருவத்தில் இருந்து பழங்களை மென்று தின்று வளர்ப்பது நல்லது. பழங்களை மென்று திண்ணும் போது அதிகமாக சாப்பிடுவதற்கு இயலாது. அதுவே சாறாகப் பருகும் போது அளவு கூடும். மென்று மெதுவாக சாப்பிடும் போது மெதுவாகவே ரத்த க்ளூகோஸும் கூடும்.
இதனால் இன்சுலினும் பிரவாகமெடுத்து சுரக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. உதாரணம் ஒருவரால் கரும்பு ஜூஸ் ஒரு டம்ப்ளர் பத்து நொடியில் குடிக்க முடியும் ஆனால் அந்த கரும்பு ஜூஸ் கிடைக்கத் தேவைப்படும் அளவு கரும்புத் திண்ண ஒரு மணிநேரம் கூட ஆகலாம்.
கூடவே அவரால் அவ்வளவு கரும்பை சாப்பிட முடியாமலும் போகலாம். மென்று திண்ண பற்கள் இல்லை என்றாலோ நோயாளிகளுக்கோ பழச்சாறுகள் தர வேண்டும் என்றால் அதில் மேற்கொண்டு சீனி / சர்க்கரை சேர்க்காமல் அதை ஒரிஜினல் பழச்சாறாகவே பருகுத் தருவது தான் சிறந்தது.
முடிவுரை
பழங்களில் உள்ள ஃப்ரக்டோஸ் நல்ல மாவுச்சத்தே ஆயினும்
அளவுக்கு மிஞ்சினால் கல்லீரலுக்கு ஆபத்து.
பழங்களை அளவோடு உண்ணலாம்
சாறாக பருக வேண்டுமென்றால் மேற்கொண்டு இனிப்பு சேர்க்காமல் பருகலாம்
நீரிழிவு நோயர்கள் அனைத்து இனிப்பு சுவை கொண்ட பழங்களையும் தவிர்ப்பதே அவர்களுக்கு சிறந்தது.