இந்த ஒரு வைட்டமின் குறைபாடு பல நோய்களுக்கு காரணமாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலனவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலைபார்ப்பதன் விளைவாகவும், வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவும், சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி வருகின்றனர் என்றால் மிகையாகாது.
இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு மிகவும் அருகிவிட்ட போதிலும், உடல் சோர்வை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியே வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

வைட்டமின் டி குறைபாடு
எப்போதும் சோர்வாக உணர்ந்தாலோ அல்லது அடிக்கடி எலும்பு மற்றும் தசை வலியால் அவதிப்பட்டாலோ அதனை சாதாரணமான எடுத்துக்கொள்ள கூடாது. இது வைட்டமின் டி சத்து குறைப்பாட்டின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

வைட்டமின் டி குறைப்பாடு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் பட்சத்தில், இதன் விளைவாக, ஆஸ்டியோபோரோசிஸ், ஆட்டோ இம்யூன் நோய்கள் போன்ற தீவிர ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
மேலும் வைட்டமின் டி குறைபாடு பல ஆபத்தான நோய்களுக்கும், உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணியாக இருக்கும். நாள் முழுவதும் ஏசி அறைகளில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கும், வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பவர்களுக்கும் வெயிலில் சிறிது நேரம் கூட செல்ல விரும்பாதவர்களுக்கும் இந்த நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

வைட்டமின் டி நமது உடலுக்குத் தேவையான முக்கிய வைட்டமின்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் சூரிய ஒளி வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது.
நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்ந்தால், அடிக்கடி எலும்பு மற்றும் தசை வலியால் அவதிப்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அடிக்கடி சளி மற்றும் பிற தொற்றுகளுக்கு ஆளானால், அல்லது முடி உதிர்வு பிரச்சினையை தொடர்ச்சியாக அனுபவிக்கின்றீர்கள் என்றால், உடலில் வைட்டமின் டி அளவை சரிபார்ப்பது அவசியம்.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
சோர்வு மற்றும் பலவீனம்: தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம் வைட்டமின் டி குறைபாட்டின் பொதுவான குறிகாட்டிகளாகும். போதுமான ஓய்வுக்குப் பிறகும் தனிநபர்கள் அதிக சோர்வாக உணரக்கூடும். இந்த சோர்வு அன்றாட நடவடிக்கைகளை பாதித்து, உற்பத்தித்திறனையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும்.
எலும்பு மற்றும் தசை வலி: வைட்டமின் டி குறைபாடு எலும்பு மற்றும் தசை வலியுடன் நெருக்கமாக தொடர்புடையது. நாள்பட்ட தசை வலி, மூட்டு வலி மற்றும் முதுகுவலி ஆகியவை வைட்டமின் டி போதுமான அளவு இல்லாததைக் குறிக்கலாம். மேலும், குறைபாடுள்ள நபர்கள் தசை பலவீனம் மற்றும் அசௌகரியம் காரணமாக எளிய பணிகளைச் செய்வதில் சிரமத்தை அனுபவிக்கலாம்.
காயங்கள் குணமடையாமை: காயம் குணமாகும் செயல்முறையில் வைட்டமின் டி யின் பங்கு இன்றியடையாதது. வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் காயங்கள் ஏற்படும் பட்சத்தில் குணமடைய அதிக நேரம் எடுக்கும். மேலும் அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாகுவார்கள். இவர்கள் அறுவை சிகிச்சைகளிலிருந்து மீள்வதையும் இந்த குறைப்பாடானது கணிசமாக பாதிக்கும்.
மனநிலையில் தீவிர மாற்றம்: வைட்டமின் டி அளவு குறைவாக இருப்பது மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலைக் கோளாறுகளுடன் தொடர்புடையது. குறைபாடுள்ள நபர்கள் தொடர்ந்தும் சோகம், எரிச்சல் அல்லது பதட்டம் போன்ற உணர்வுகளுக்கு ஆளாகுவார்கள்.

வைட்டமின் D யை பெற்றுக்கொள்ள சிறந்த வழி
சூரிய ஒளியில் படும் போது சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தியாகிறது. இது கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் வலுப்படுத்த உதவுகிறது.
கூடுதலாக, வைட்டமின் டி தசை செயல்பாடு, நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் செல்கள் ஆகியவற்றிற்கும் அவசியம். ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைக்கு 400 யூனிட் வைட்டமின் டியும் 1 வயதில் இருந்து 70 வயது வரையில் 600 யூனிட் வைட்டமின் டி யும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 800 யூனிட் வைட்டமின் டி நாளொன்றுக்கு தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு 100 கிராம் மத்தி மீனிலும் 4.8 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது. மேலும் இவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை கொண்டுள்ளன. எனவே மத்தி மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான அடிப்படை சத்துக்களை பெற முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தினசரி 200 கிராம் மத்தி மீனை உணவில் சேர்த்துக்கொள்வதால், 500 யூனிட் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கின்றது. அதிகபட்சம் வைட்டமின் டி சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில் இருப்பதால் அவற்றை முழுவதுமாக சாப்பிட வேண்டும்.
ஒரு மஞ்சள் கரு சாப்பிடுவதால், 40- 50 யூனிட் வைட்டமின் டி கிடைக்கின்றது. நாளொன்றுக்கு தேவையான வைட்டமின் டி யை முட்டையில் இருந்து மட்டுமே பெற நினைத்தால் 10 முட்டைகள் வரையில் சாப்பிட வேண்டும்.இது சாத்தியமற்றது.

பலருக்கு தினசரி உணவில் இருந்து போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை. குறிப்பாக, சூரியன் வராத பகுதிகள் அதிக பிரச்னைகளை சந்திக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதனை மருத்துவ ஆலோசனையுடன் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்.
சிலர் வைட்டமின் டியை பெற மீன் எண்ணெய் மாத்திரைகளையும் பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் மிக குறுகிய அளவிலேயே வைட்டமின் டி கிடைப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்ந்தால் நிச்சயம் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொண்ட பின்னரே சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |