பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் இதோ
பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக அதனை ஜூஸாக தயாரித்து ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். காலையில் எழுந்ததும் அந்த நாளை உற்சாகமாக தொடங்குவதற்காக பழச்சாறு பருகுபவர்களும் இருக்கிறார்கள்.
அது ஆரோக்கியமானதாக தோன்றினாலும் அதில் சர்க்கரை அதிகம் கலந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழச்சாறை சரியான வழியில் பருகினால் நன்மை பயக்கும்.
‘‘பழங்களை ஜூஸாக்கும் செயல்முறையின்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பழச்சாறு சிறந்த தேர்வாக அமையாது.
ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை ரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். பழச்சாறுக்கும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற பாதிப்புகளுக்கும் தொடர்பு உண்டு. எனவே பழச்சாறு பருகுவது நல்ல யோசனை அல்ல’’ என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏன் பழம் சாப்பிட வேண்டும்?
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:
பழச்சாறு தயாரிக்கும்போது பழங்களின் தோலை அகற்றுவோம். ஆனால் பல பழங்களின் கூழ், தோலில்தான் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும். பழச் சாறாக பிரித்தெடுக்கும்போது இந்த ஊட்டச்சத்துக்கள் வீணாகி விடும்.
உதாரணமாக ஆரஞ்சு பழங்களில் பிளவனாய்டுகள் அதிகளவில் இருக்கும். ஜூஸ் பிழியும்போது அது கூழில் கலந்து குப்பைக்கு சென்றுவிடும்.
நார்ச்சத்து:
பழச்சாறு பருகுவதில் மற்றொரு தீமை என்னவென்றால் அதில் நார்ச்சத்து முழுமையாக இருக்காது. பழங்களை ஜூஸாக பிழியும்போது அதிலிருக்கும் சர்க்கரை சாறில் கலக்கும். நார்ச்சத்து நீங்கிவிடும். அதனால்தான் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.
அதை அப்படியே சாப்பிடும்போது அதிலிருக்கும் நார்ச்சத்து முழுமையாக உடலுக்குள் சென்றுவிடும். பழத்தின் தோல் மற்றும் கூழ் ஆகியவற்றில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பழச்சாற்றை விட பழம் சிறந்ததாக கருதப்படுகிறது. பழங்களாக சாப்பிடுவது, செரிமான செயல்முறையை எளிதாக்கவும், மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவும்.
மெல்லுதல்:
உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி உணவை மெதுவாகவும், சரியாகவும் மெல்லுதல் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செரிமானத்திற்கும் துணை புரியும்.
மேலும் மென்று சாப்பிடுவது அதிகப்படியான உணவை உட்கொள்வதை தடுக்கும். அதனால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்காது. உணவை குறைந்தது 24 முறை மென்று சாப்பிட வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பசியை போக்கும்:
பசியை போக்க சிறந்த வழி பழங்கள் சாப்பிடுவதுதான். சிற்றுண்டி நேரத்தில் பழங்கள் உண்ணும் போது பசி அதிகம் எடுக்காது. அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். அத்துடன் பழங்கள் அனைத்து உடல் செயல்பாடுகளையும் எளிதாக்கும். பழங்கள் அதிக கலோரிகளையும் வழங்குவதில்லை.
நிர்வகிக்க உதவும்:
பழங்கள் சாப்பிடுவது வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும். துரித உணவுகளை அதிகமாக உண்பதை தவிர்க்க உதவும். உடல் எடை, நீரிழிவு, ரத்த சர்க்கரை போன்றவற்றை நிர்வகிக்க உதவும். அதனால் கூடுமானவரை பழச்சாறுக்கு பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுங்கள்!