ஜெயக்குமார் கைது விவகாரம் - ரகசிய இடத்தில் விசாரணை.. போராடிய ஜாமீனுக்கு ஆப்பு வைத்த நீதிபதி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் தான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தொண்டர்களுடன் சென்று மடக்கி பிடித்து சட்டையை கழற்றி தெருவில் நடக்க விட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெயக்குமார் மீது புகார் எழுந்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, 40 பேர் அடங்கிய போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
பின்னர் அவரை, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அவர்கள் மீது கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல், ஆபசமாகத் திட்டுதல் உள்ளிட்டப் பிரிவுகளில் 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுமார் 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர்.
விசாரணைக்கு பின் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். உடனடியாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆனால், இன்று நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.