நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே எல்லா பருவங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து செறிந்து காணப்படுகின்றது.
கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த கத்தரிக்காயில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 8
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவல்- அரை கப்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு - 4 பல்
கடுகு - 1/4 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
மிளகாய் பொடி - 2 தே.கரண்டி
தனியா பொடி - 1 தே.கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தே.கரண்டி
சீரகம், சோம்பு- 1 தே.கரண்டி
புளி தண்ணீர் - 1 கப்
காய்ந்த மிளகாய் -2
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணடி பதத்திற்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து மென்மையாக வதக்கி ஆறவிட வேண்டும்.
வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அத்துடன் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் எக்ஸ் வடிவில் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பில்லை சேர்த்து வதக்கி, அதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
அதன் பின்னர் புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் பொறித்த கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |