பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை புரட்டி எடுத்தது எப்படி? ரோகித் சர்மா விளக்கம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நேற்று பெர்மிங்கம்மில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது.
இத்தொடரையும் 2 வெற்றியுடன் கைப்பற்றி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 26 ரன்களும் அடித்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
ஆனால், அதன் பின்னர் வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என அனைவரும் அவுட் ஆகி நடையை கட்ட, கடைசியாக ஜடேஜா 29 பந்துகளில் 46 ரன்களை விளாசி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு புவனேஷ்வர் குமாரின் வேகத்தில் டாப் ஆர்டர் சொற்ப ரன்களுக்கு வெளியேற, கேப்டன் மொயீன் அலி 35 ரன்களும், டேவிட் வில்லி 33 ரன்களும் எடுத்தனர்.

ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார்
இறுதியில் அந்த அணி 17 ஓவர்களில் 121 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதன் மூலம் புவி ஆட்டநாயகன் விருதை பெற, கேப்டன் ரோகித் சர்மா தெரிவிக்கையில், இங்கிலாந்து எவ்வளவு பலமான அணி என்பதை அறிவோம்.
அவர்கள் எங்கு சென்றாலும் வெல்வார்கள். எனவே அவர்களை வீழ்த்த நம்பிக்கை மட்டுமே பெரிய ஆயுதமாக வேண்டும். அதனை சரியாக செய்தோம்.
ஒருவர் ஆட்டம் முழுக்க களத்தில் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஜடேஜா இந்த மைதானத்தில் சதமடித்திருந்தார்.

அதனை அப்படியே தொடர்ந்துக்கொண்டு வந்துள்ளார். அடுத்த போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என காத்திருக்கிறோம்.
பெஞ்சில் எதிர்பார்த்து காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு தர நினைக்கிறேன். இதுகுறித்து பயிற்சியாளரிடம் நான் ஆலோசனை நடத்தவுள்ளேன்.
மேலும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது தான் இந்திய அணியின் தற்போதைய திட்டமாக உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.