நடித்துக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்த கலைஞர்! கலங்க வைக்கும் காட்சி
சத்யமங்கலத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் ஒருவர் மேடையில் நடித்துக்கொண்டு இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
நாடக கலைஞர் ராஜய்யன்
சத்யமங்கலம் அருகே உள்ள குப்பந்துறை எனும் கிராமத்தில், மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாடகம் மொத்தம் 5 நாட்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் நடத்தப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் இரணியன் நாடகம் 5 நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், குப்பந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜய்யன்(62) என்ற முதியவர் முன்னின்று நாடகத்தினை நடத்தியுள்ளார்.

மயங்கி விழுந்த சோகம்
ராஜய்யன் உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் இந்த நாடகத்தில் நடித்து வந்துள்ள நிலையில், கடைசி நாள் நாரதர் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த ராஜய்யன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
தண்ணீர் கொடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு, பின்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
நாடகத்தின் மீது உயிராக இருந்த ராஜய்யன், நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.