நடிகர் அபினய்க்கு வந்த கல்லீரல் நோய் - விளக்கிய மருத்துவர்
கல்லீரல் நோய் முற்றி நடிகர். அபினய் அவர்கள் இறந்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
கல்லீரல் நோய்
கல்லீரல் நோய் முற்றி நடிகர். அபினய் அவர்கள் இறந்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லா தன்னுடைய பேஸ்புக் பதிவில்,
அவரை இழந்து வாடும் அவர் தம் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.
கல்லீரல் நோய் என்றாலே அது மது அருந்துவதால் தான் வந்திருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.
இருபது வருடங்களுக்கு முன்பு, கல்லீரல் நோய் என்று ஒருவர் வந்தால் அவர் அளவுக்கு மீறி மது அருந்தியதால் அவருக்கு கல்லீரல் நோய் வந்திருக்க நூற்றுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு அதிகம்.
ஆனால் இப்போது கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு மது மட்டுமே காரணமன்று.
மதுவுடன் சேர்த்து அதிக மாவும் இனிப்பும் உடல் உழைப்பின்மையும் உறக்கமின்மையும் மன அமைதியின்மையும் இப்போது காரணமாகி இருக்கின்றன.

ஆம்... கல்லீரலை பாதிக்கும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் இரண்டு வகைப்படும்
1. முதல் வகை மதுவினால் ஏற்படுவது இதை "ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய்"
2. இரண்டாவது வகை மது அல்லாத காரணங்களால் ஏற்படும் "ஃபேட்டி லிவர் நோய்"
வளர்சிதை மாற்ற காரணிகளால் இந்த நோய் ஏற்படுவதால் இதற்கு "MAFLD" METABOLIC ASSOCIATED FATTY LIVER DISEASE என்று அழைக்கப்படுகிறது.
DoctorFarook Abdulla
பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய ஆணோ பெண்ணோ அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக தென்படும் "ஃபேட்டி லிவர்" என்ற கண்டுபிடிப்பு இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது.
உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில் Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த "கல்லீரலில் கொழுப்பு படியும் நோய்" நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால் இது "நார்மல்" என்று ஆகிவிடாது.
கல்லீரல் அடிவாங்குகிறது என்பதும். அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு.

எதற்கும் அசையாத ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பு. தான் உண்டு. தன் வேலையுண்டு என்று அதன் வேலையைப் பார்க்கும். அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது.
கல்லைக்கூட செரிமானம் செய்யக்கூடியது. ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த "கல்லீரல் கொழுப்பு படியும் நோய்". . சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டு தான் போனேன். அவன் எங்கே மது அருந்தினான்? மது என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது.
ஆனாலும் அவனது கல்லீரலில் எப்படி கொழுப்பு ஏறியது? கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா? கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று.
நல்லதன்று. நிச்சயம் கெட்டது. இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக் கொள்வோம். எதனால் கல்லீரலில் கொழுப்பு சேருகிறது?? கல்லீரலின் பிரதான வேலைகளுள் சில
க்ளூகோசை -> கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது.
லைபோ புரதங்களை உருவாக்குவது - ரத்த உறைதலுக்குத் தேவையான காரணிகளை உருவாக்குவது - எதிர்ப்பு சக்திக்குத் தேவையான
ஆண்டிபாடிகளை உருவாக்குவது - ப்ளாஸ்மா புரதங்களை உருவாக்குவது - கொழுப்பை செரிமானம் செய்யத் தேவையான பித்த நீரை சுரப்பது என்று கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யலாம்.
ஒரு உதாரணம் கூறுகிறேன்... ஒரு கிலோ மாவு வாங்கிக் கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார். ( ஏன் அப்பா சுட மாட்டாரா? அம்மா தான் சுட வேண்டுமா.. என்று கேட்டு விடாதீர்கள்.
இது கதை மட்டுமே. வீட்டில் கணவர் மனைவி இருவருமே உணவு சமைக்கலாம்.) மீதம் மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது நம் அம்மாவுக்குத் தெரியும்.
அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்கத் தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..!
ஆனால் அடுத்தநாளும் மறதி கொண்ட நம் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்?? இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார்.

ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும். இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!! ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது.
ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள் மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும்.
அது வரம்பு மீறிச் சென்றால் நம் கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும். மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் அதிக மாவுச்சத்து தான்.
கொழுப்பு அல்ல உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை/ பால் போன்றவற்றை நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு/ கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை குறையாது.
அதிகமாகவே செய்யும். ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால் இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும்.
அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும். இதில் grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது.
நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை. Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein) இது அடுத்த கட்டம் Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது .
இது முற்றிய நிலை. எனினும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கிரேடிங் செய்யப்படுவது மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடுகிறது.
எனவே, என்னைப் பொருத்தவரை கிரேடு 2 மற்றும் அதற்கு மேல் கிரேடிங் செய்யப்படும் மக்கள் - கட்டாயம் ஃபைப்ரோ ஸ்கேன் (FIBRO SCAN) எனும் இன்னும் துல்லியமான ஸ்கேன் செய்து கல்லீரல் பாதிப்பின் அளவை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
ஃபைப்ரே ஸ்கேன் மூலம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்லீரல் திசு பாதிப்புக்குள்ளாகி தழும்பாகி இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இந்த கல்லீரலில் படியும் கொழுப்பானது, பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம் (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதை சுருக்கமாக NASH என்று அழைக்கிறோம்.
இத்தகைய நிலையில், கல்லீரல் செல்கள் தொடர்ந்து இடற்பாட்டுக்கு உள்ளாகி மரணமடைந்து தழும்புகளாக மாறிவிடும். இவ்வாறு சிறுகச் சிறுக மீளுருவாக்கம் செய்ய இயலாத நிலையை அடைந்து சுருங்க ஆரம்பித்து விடும்.

இது கல்லீரல் அழற்சி நோய் (Cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது. இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய்(HEPATO CELLULAR CARCINOMA) அல்லது கல்லீரல் செயலிழப்பு(LIVER FAILURE) வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.
நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில் மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும் ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை.
நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.
இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன். குழந்தைகள் எதை உண்ண வேண்டும் . எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஃபேட்டி லிவரை அதன் ஆரம்ப நிலையில் ரிவர்ஸ்/ சரி செய்ய இயலும்.. எப்படி?? ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா.
பிரச்சனை
மாவுச்சத்து அடங்கிய உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. அதை உடனே நிறுத்த வேண்டும். தினமும் உட்கொள்ளும் மாவுச்சத்தின் அளவைப் பாதியாகக் குறைக்க வேண்டும் இனிப்பு சுவை தரும் அனைத்து உணவுகளையும் பண்டங்களையும் நிறுத்த வேண்டும்.
குறை மாவு தேவையான புரதம் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு உணவு முறைக்கு மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும். எப்படி????
1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.
2.இந்த உணவு முறையில், நியூட்ரிசனல் கீடோசிஸ் நிலையில், உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து விடும்.
3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை.
இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும். உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள்.

அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள். ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது.
எதைத்தின்றதால் அது வந்ததோ அதை நிறுத்த வேண்டும். சிரோசிஸ் அல்லாத ஆரம்ப நிலைகளில் இருக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சனை "குறை மாவு நிறை கொழுப்பு" உணவுமுறையால் கட்டுப்படும் வாய்ப்பு அதிகம்.
சிரோசிஸ் / முற்றிய ஃபேட்டி லிவர் இருப்பவர்கள் - குடல் மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு நிபுணரின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும்.
சிரோசிஸ் நோய் ஏற்படும் போது கல்லீரல் ஆல்புமின் உற்பத்தியை குறைப்பதால், வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்து வயிறு வீங்கும், உடல் மெலிந்து போகும், உணவுக் குழாயில் ரத்த நாளங்கள் புடைப்பு ஏற்படுத்தி பின்னாளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவு உண்டாகலாம்.
எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படலாம். சிரோசிஸ் நோயில் மஞ்சள் காமாலை ஏற்படவும் செய்யலாம். ஏற்படாமலும் இருக்கலாம்.
கல்லீரல் பாதிப்பு என்றாலே மஞ்சள் காமாலை இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சிரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையாக "கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை" நிவாரணமாக இருக்கிறது.
இறந்த கொடையாளரிடம் இருந்து எடுத்து வைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை, உயிருள்ள உறவினரிடம் இருந்து கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து வைப்பது இரண்டாவது வகை.
இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. தனியாரின் முப்பது லட்சம் வரை செலவினம் வருகிறது.

இவையன்றி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாதோருக்கு சிரோசிஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வயிற்றில் சுரக்கும் நீரை வெளியேற்றுதல், அவ்வப்போது எண்டோஸ்கோபி செய்து ரத்த நாள வெடிப்புகளுக்கு சுருக்கு முடிச்சு போடுதல், கல்லீரலுக்கு உகந்த மருந்துகளை உண்ணுதல் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
புரதச்சத்து மிக்க, கொழுப்புச் சத்து குறைவான, மாவுச்சத்து குறைவான உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இருப்பின் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி எட்டு மணிநேர உறக்கம் மன அமைதி பேணும் வாழ்வியல் இவையும் கல்லீரல் நலம் பேண முக்கியம். சிரோசிஸ் என்பது முடிவுரை அன்று. முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலமும் கண்காணிப்பு மற்றும் சிறப்பான கவனிப்பு மூலம் சிறந்த வாழ்வையும் ஆயுள் நீட்சியையும் உறுதி செய்ய முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |