Tomato Chutney:வித்தியாசமான சுவையில் உளுந்து பொடி தக்காளி சட்னி எப்படி செய்வது?
காலை உணவாக நாம் எல்லோரும் இட்லி தோசை பெரும்பாலும் செய்வோம். இதற்கு தொட்டுக்கொள்ள எப்போதும் நமது நேரத்திற்கு தகுந்ததை போல ஒரு சுலபமான சட்னி செய்துவிடுவோம்.
இந்த பதிவில் வித்தியாசமான முறையில் எப்படி உழுந்துப்பொடி தக்காளி சட்னி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இந்த உழுந்துப்பொடி இந்த தக்காளி சட்னியில் சேர்க்கப்படுவதால் இது உங்கள் உணவிற்கு வித்தியாசமான சுவையை கொடுக்கும்.
இதில் வெங்காயம், தேங்காய் சேர்க்கப்படுவதில்லை. இது எந்த பயணத்தின் போதும் எடுத்துக்கொண்டு செல்லலாம். இது உடலுக்கு ஆரோக்கியமாகவும் எளிதாகவும் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
- உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
- வரமல்லி – ஒரு ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- வரமிளகாய் – 2
- பூண்டு – 2 பல்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- தக்காளி – 3
- புளி – சிறிது
- மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
- தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- கடுகு – கால் ஸ்பூன்
- சீரகம் – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- வர மிளகாய் – 1
- பெருங்காயத்தூள் – சிறிது
செய்யும் முறை
முதலில் தக்காளியை நன்றாக கழுவிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் உளுந்து சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து சிவந்து வரும்போது, அதில் சீரகம், வரமல்லி, வர மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவேண்டும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்தது சூடானவுடன், தக்காளி சேர்த்து கிளறவேண்டும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவேண்டும். தக்காளி நன்றாக வதங்கியவுடன், அடுப்பில் இருந்து இறக்கி அதை ஆற வைக்கவேண்டும்.
இதன் பின்னர் இதை வறுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் மற்ற பொருட்களை காய்ந்த மிக்ஸியில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். அது நன்றாக பொடியானவுடன், வதக்கி ஆறவைத்துள்ள தக்காளியை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
இதன் பின்னர் தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். இதை அரைத்த சட்னியில் சேர்த்தால் வித்தியாசமான சுவையில் உளுந்து தக்காளி சட்னி தயார். இதை இட்லி, தோசை, ஷப்பாத்தி போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |