மனநிலையில் மாற்றம் தரும் தர்ம சக்கர முத்திரை!
எந்நேரமும் அலைச்சல், சோர்வு, மனதில் நிம்மதியில்லை தற்சமயம் பெரும்பாலானோரின் கூற்று இதுவாகத்தான் இருக்கின்றது.
ஏன் என்றால் நாம் அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் உடலையும் மனதையும் கவனித்துக்கொள்ள நேரம் செலவழிப்பது மிகவும் குறைவாக இருக்கிறது.
இருந்தாலும் மனதினை ஒருநிலைப்படுத்த சில விடயங்களை நாம் செய்தே ஆகவேண்டும். அதில் ஒன்று தான் யோகா முத்திரைகள். யோகாசனத்தில் ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
அதில் தர்ம சக்கர முத்திரை மனதை ஒருநிலைப்ப படுத்துவதில் எந்தளவுக்கு பங்களிப்பை வழங்குகின்றது என்பது பற்றி பார்ப்போம்...
இந்த முத்திரையை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்...
முதலாவதாக நமது இரு கை விரல்களையும் இதயத்துக்கு நேராக வைத்துக் கொள்ளவும்.
வலது கை இடது கைக்கு சிறிதளவு மேலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இரு கைகளினதும் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களின் நுனிகளை ஒன்று சேர்த்துகொள்ள வேண்டும். இது வட்டமாக காட்சியளிக்கும்.
இடது உள்ளங்கையானது இதயத்தை நோக்கி பார்ப்பதைப் போல் வைத்திருக்க வேண்டும். வலது கையின் பின்புறம் இருதயத்தை நோக்கி இருக்க வேண்டும்.
நமது இடது கையின் நடுவிரலை வலது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியுடன் தொட்டுக்கொள்ள வேண்டும்.
ஏனைய விரல்கள் நீட்டியவாறு தளர்வாக இருக்க வேண்டும். இந்த பயிற்சியின்போது நமது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும்.
இதை எந்த இடத்திலும் அமர்ந்தோ அல்லது நின்றுகொண்டோ செய்யலாம். 15 நிமிடங்கள் வீதம் தினமும் 3 முறைகள் செய்வது நன்மையளிக்கும்.
இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
- மனதில் சந்தோஷம் இருக்கும்.
- செயற்பாட்டில் நம்பிக்கை இருக்கும்.
- மனசஞ்சலம், மனக்குழப்பம் நீங்கும்.
- பேரின்ப நிலை உண்டாகும்.
- மனநிலையில் மாற்றம் ஏற்படும்.
- மனதுக்கும் உடலுக்கும் நல்ல சக்தி கிடைக்கும்.
- நல்ல எண்ணங்கள் உருவாகும்.