பார்த்தாலே சாப்பிட தூண்டும் தேங்காய் சாதம்! நாவூறும் சுவையில் செய்வது எப்படி?
தேங்காயில் நம் உடலின் ஆரோக்கியத்துக்கு தேவையான மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
தினமும் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம், முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன் தோலின் மினுமினுப்பை கூட்டும்.
முக்கியமாக இதிலுள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது, சிறுநீரக தொற்று உள்ளவர்களுக்கு நன்மை தரும்.
இதனை கொண்டு சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 1 கப்
தேங்காய் துருவல்- அரை கப்
எண்ணெய்- 2 டீஸ்பூன் (தேங்காய் எண்ணெயாக இருந்தால் நல்லது)
கடுகு, உளுத்தம்பருப்பு- அரை டீஸ்பூன்
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
முந்திரி- 10
காய்ந்த மிளகாய்- 2 (காரத்திற்கு ஏற்ப)
கருவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு
பெருங்காயத்தூள்- சிறிதளவு

செய்முறை
கடாயை அடுப்பில் வைத்ததும் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
அடுத்த கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கியதும், சிறிதளவு பெருங்காயத்தூள் முந்திரி சேர்க்கவும்.
இதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்த பின்னர், துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக வந்தவுடன் சிறிது சிறிதாக சாதம் சேர்த்து கிளறிவிடவும், கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான தேங்காய் சாதம் தயார்!!!
