15 நிமிடத்தில் தயாராகும் தேங்காய் முட்டை சாதம்
பொதுவாக தற்போது வீட்டிலுள்ளவர்களுக்கு வகை வகையாக சமைத்து சாப்பிடுவதற்கு எல்லாம் நேரம் இல்லாமல் இருக்கிறது.
காலையில் சென்று இரவு வீடு திரும்பும் பழக்கம் வந்து விட்டது. ஓடிக் கொண்டிருக்கும் நவீனமயமாக்கலின் பின்னால் ஓடினால் தான் சாதிக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.
அப்படி இருக்கும் பொழுது குறைவான நேரத்தில் உடலை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளும் உணவுகளை செய்வது தாய்மார்களின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.
பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் மதிய உணவை முழுமையாக சாப்பிடுகிறார்களா? என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனின் குழந்தைகளின் ஆர்வம் தற்போது துரித உணவுகள் பக்கம் திரும்பி விட்டது. காலைக் கொண்டு செல்லும் உணவை மதியம் வரும் பொழுது வீட்டிற்கு கொண்டு வரும் பழக்கம் அதிகரித்து விட்டது.
அப்படி கொண்டு வரும் குழந்தைகள் ருசித்து சாப்பிடும் ரெசிபிகளில் ஒன்று தான் தேங்காய் முட்டை சாதம். இதனை ஒருமுறை செய்து அனுப்பினால் தினமும் அதை தான் விரும்பி கேட்பார்கள்.

அந்த வகையில், தேங்காய் முட்டை சாதம் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- ஒரு கைப்பிடி அளவு
- பூண்டு- 3 பல்
- கருவேப்பிலை -ஒரு கைப்பிடி அளவு
- காய்ந்த மிளகாய் - 6
- சீரகம்- 1/2 டீஸ்பூன்
- எண்ணெய்- 2 டீஸ்பூன்
- கடுகு உளுந்து- 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- உப்பு- தேவையான அளவு
- முட்டை- 2
- வடித்த சாதம்- வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கையை பொருத்து நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
செய்முறை
முதலில் ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் தேங்காய் பூ, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய்விட்டு, அதில் கடுகு உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கடலைப்பருப்பு போன்ற பொருட்களை போட்டு நன்றாக வறுக்கவும்.
அடுத்து வெங்காயத்தை போட்டு வதங்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து வதங்க விடவும். தேங்காய் வதங்கிய பின்னர், இரண்டு முட்டைகளை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.

முட்டை ஒரு பதத்திற்கு வந்தவுடன் தேவையான அளவு சாதத்தை கொட்டி கிளறி விடவும்.
இறுதியாக மிளகுத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான தேங்காய் முட்டை சாதம் தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |