அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்! வைரலாகும் காணொளி
சீன உளவு பலூன் மீது அமெரிக்க ராணுவ விமானம் தாக்குதல் நடத்திய காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்க வான் பரப்பிற்குள் இராட்சத உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த பலூன் விவகாரம் சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
சீனாவினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த பலூன் காரணமாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிலின்கன் சீனாவிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை ஒத்தி வைத்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் குறித்த பலூன் அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான சீனாவின் கண்காணிப்பு பலூன் அட்லாண்டிக் கடற் பரப்பில் வைத்து அமெரிக்க தாக்குதல் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் தகவல் வெளியிட்டு இருந்தார்.
இந்த சம்பவம் அமெரிக்க சீன ராஜதந்திர உறவுகளில் மீண்டும் விரிசல் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த ராட்சத கண்காணிப்பு பலூனை தாக்கி அழிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கி இருந்தார் என ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தினர் இந்த பலூனை சுட்டு வீழ்த்துவது குறித்த யோசனையை முன்மொழிந்திருந்தனர் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பலூன் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் பாகங்களை ராணுவத்தினர் தற்பொழுது சேகரிக்க ஆரம்பித்துள்ளனர் இதற்காக விசேட கப்பல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆழ் கடல் சுழியோடிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கடற்படை சுழியோடிகள் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் பாகங்களை சேகரிப்பதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.