மின்கம்பி பராமரிப்பில் புதிய புரட்சி – சீனாவின் அதிநவீன பாம்பு ரொபோ!
வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள உயரமான மின்கம்பிகளில் ஏற்படக்கூடிய கோளாறுகளை துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றை சீரமைக்கும் வகையில் சீனாவில் அதிநவீன ரொபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மின்கம்பிகளில் பாம்பு போன்று ஊர்ந்து சென்று, மின் விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை அடையாளம் காணும் இந்த ரொபோ தொடர்பான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

சீனாவின் அதிநவீன ரொபோ
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதியில் இந்த ரொபோ தற்போது மின்கம்பிகளை ஆய்வு செய்து, பழுதுபார்க்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மனிதர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை விட சுமார் மூன்று மடங்கு வேகமாக இந்த ரொபோ செயல்பட்டு, தேவையான திருத்தப் பணிகளை மேற்கொள்வதாக சீன மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மிக உயரமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகளில் நேரடியாக ஊர்ந்து செல்லக்கூடிய இந்த ரொபோ, மின் விநியோகக் கட்டமைப்புகளின் நுணுக்கமான பகுதிகளையும் ஆய்வு செய்யும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 130 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மின்கம்பிகளை இந்த ரொபோ ஆய்வு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மின்கம்பிகளில் கோளாறுகள் ஏற்பட்டு மின் விநியோகத் தடை ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இதுவரை பெரும்பாலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
எனினும், தற்போது ட்ரோன்களுக்கு மாற்றாகவும், அவற்றுடன் இணைந்து செயல்படும் வகையிலும் இந்த புதிய ரொபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் சீனாவில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மின்கம்பி கட்டமைப்புகளின் மிக நுணுக்கமான பகுதிகளில் ஏற்படும் சிறிய அளவிலான கோளாறுகளைக் கூட மனிதர்களால் நேரடியாகச் சென்று கண்டறிவது பல சந்தர்ப்பங்களில் சிரமமாக இருந்து வருகிறது.
இத்தகைய ஆபத்தான மற்றும் சவாலான பணிகளை ரொபோ மூலம் மேற்கொள்வதன் மூலம், மின்சாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், பழுதுகளை விரைவாகக் கண்டறிந்து மின் விநியோகத்தை சீராகப் பேணவும் இது பெரிதும் உதவியாக இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாகக் கருதப்படும் இத்தகைய ரொபோக்கள், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |