potato fry: செட்டிநாடு பாணியில் உருளைக்கிழங்கு வறுவல்... இப்படி செய்தால் சுவை அள்ளும்!
பொதுவாகவே சைவ மற்றும் அசைவ பிரியர்களின் பொதுவான பட்டியலில் உருளைக்கிழக்கு நிச்சயம் இடம்பிடித்துவிடும்.
இன்னும் சொல்லப்போனால் சைவ உணவுகளை சாப்பிடவே விரும்பாதவர்களும் கூட உருளைக்கிழக்கை விரும்புவார்கள்.
இதன் சுவை அந்தளவுக்கு தனித்துவம் மிக்கமாகவும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றது.
குழந்தைகள் முதல் பெரியலர்கள் வரையில் அனைவராலும் அதிகம் விருப்பப்படும் உருளைக்கிழங்கை கொண்டு செட்டிநாடு பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு தேவையானவை
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
பொடிக்கு தேவையானவை
மல்லி விதை - 2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 4
மிளகு - 1/2 தே.கரண்டி
கிராம்பு - 1
பட்டை - சிறிய துண்டு
தாளிப்பதற்கு தேவையானவை
கடலை எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்முறை
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து, கிழங்கு மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வரையில் நன்றாக வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, உளுத்தம் பருப்பு, சோம்பு, கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய், மிளகு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் குளிரவிட்ட குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டியெடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அதனுடன் பொடித்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து 4 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் வீடே மணக்கும் செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |