உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கும் ஒரே ஒரு பழம்! பலருக்கும் தெரியாத ரகசியம்
முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் முந்திரி பழத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.
ஆனால் அந்த முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால், நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும். மேலும் முந்திரியை எப்படி விரும்பி சாப்பிடுகிறோமோ, அதேப்போல் இதனை சாப்பிட முடியாது.
முந்திரி பழம்
முந்திரி அல்லது மரமுந்திரி (Anacardium occidentale) என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது விரும்பி உண்ணப்படும் முந்திரிக்கொட்டைகளைத் தரும் ஓர் மரம் ஆகும்.
முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.
முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும்.
இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.
முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டை யில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும்.
இது உண்மையான பழமாக இருந்தபோதிலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.
Cashew என்ற பெயர் வந்தது எப்படி?
Anacardium என்ற பெயரானது முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். ana என்பது மேல்நோக்கிய என்ற பொருளையும், cardium என்பது இதயம் என்ற பொருளையும் குறிக்கின்றது.
தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்பை ஒத்த பழத்தையுடைய மரமாக இருப்பதனால் Anacardium என்ற பெயரைப் பெற்றுள்ளது.
முந்திரிக்கொட்டையானது போர்த்துகீச மொழியில் கஜூ (Caju) என்ற பெயரைக் கொண்டிருப்பதனால், கஜூ என்ற பெயரும் பேச்சுத் தமிழில் பயன்பாட்டில் உள்ளது.
போர்த்துகீச மொழியில் Caju எனப்படும் சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் Cashew என்ற பெயர் வந்ததாக அறியப்படுகின்றது.
போர்த்துக்கீச மொழியில் கஜூ என்ற பெயரானது, Tupian மொழியிலுள்ள acajú என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது.
Tupian மொழியில் acajú என்பது தன்னைத் தானே உருவாக்கும் கொட்டை என்ற பொருளில் அமைந்துள்ளது. பொதுவாக விதைகள் அல்லது கொட்டைகள் பழத்திற்கு உள்ளாகவே அமைந்திருக்கும்.
ஆனால் இந்த முந்திரிக்கொட்டை நாம் முந்திரிப்பழமென அழைக்கும் பகுதிக்கு வெளியாக அமைந்திருப்பதனால் இப்பெயரைப் பெற்றுள்ளது.
போலிப்பழம்
முந்திரிப்பழம் என அழைக்கப்படும் போலிப்பழமானது ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருந்து, பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும்.
இது உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பாக இருப்பதுடன், இனிய வாசனை ஒன்றையும் தரும். இது மிக மெல்லிய தோலுடையதாகவும், இதன் சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருப்பதனால், இதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது கடினமாகும். இதிலிருந்து சாறும் தயாரிக்கப்படுகின்றது.
image: ayoubs.ca
முந்திரி பழத்தில் உள்ள சத்துக்கள்
முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது.
முந்திரி பழத்தின் நன்மைகள்
நுரையீரல் செயல்பாடு
முந்திரி பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன.
இதன் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.
இதயத்தை பாதுகாக்கும்
முந்திரி பழம் இதய நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.
இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிடவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேணவிரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம்.
எலும்புகளுக்கு ஆரோக்கியம்
எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
கல்லீரலை சுத்தப்படுத்தும்
முந்திரி பழம் கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது.
அத்துடன் உடலின் பி. எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கும்
முந்திரி பழம் உண்ணும்போது அவை கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இப்பழத்தினை உண்டு உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்
முந்திரி பழத்தில் காணப்படும் அதிகளவு விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸினால் உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாவதோடு மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.
புற்றுநோயினை தடை செய்யும்
முந்திரி பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், பாலிபீனாக்கில்கள் புற்றுச் செல் உருவாவதை தடைசெய்கின்றன. இப்பழத்தினை உண்பதால் நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படுகிறது.
மலச்சிக்கலைத் தடுக்கவும்
மலச்சிக்கலானது கழிவில் உள்ள நீர்ச்சத்தினை பெருங்குடல் உறிஞ்சும்போது உண்டாகிறது. இப்பழானது சார்பிட்டால் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.
இப்பொருளானது பெருங்குடலினை அடையும் போது பெருங்குடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கி மலத்தினை இளக்கி எளிதில் வெளியேற்றுகிறது.
சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு
விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.
கேசத்தில் இப்பழச்சாற்றினை தேய்க்கும்போது பொடுகு உள்ளிட்ட கேசப்பிரச்சினைகள் தீருகின்றன.
சருமம் மற்றும் கேசத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், சாம்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில் இப்பழச்சாறு பயன்படுத்தப்படுகிறது.
image: holgs/getty
சாப்பிடும் முறை என்ன?
முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அழுகி விடும். அதனால் தான் இப்பழம் இந்தியாவில் அதிகம் விற்கப்படுவதில்லை. மேலும் இப்பழத்தின் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலமானது.
முந்திரி பழத்தை சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாமல் இருக்க, அதனை வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும்.
