சரும பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் கேரட் தொக்கு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய கேரட்டில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் கே மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளது.
அதனால் கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது பார்வை பிரச்சினைகள் தொடக்கம், சரும பொலிவு வரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.
சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் கேரட் பெரிதும் துணைப்புரியும்.அதனால் தான் அழகுசாதன பொருட்களின் உற்பத்தியில் கேரட் முக்கிய இடம் வகிக்கின்றது.
மேலும் புற்றுநோய்க்கு காரணமாகும் சில தொற்றுக்களை எதிர்ப்பதுடன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கேரட் கொண்டிருப்பதாக சில ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த கேரட்டை கொண்டு செட்டிநாடு பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு தொக்கு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 500 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - கால் தே.கரண்டி
வெந்தயம் - கால் தே.கரண்டி
கடுகு - அரை தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
செய்முறை
முதலில் கேரட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து ஈரம் போகும் வரையில் நன்றாகத் துடைத்து, தோலை சீவி விட்டு நன்றாக துருவி ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றாமல் வெறுமனே பெருங்காயம், வெந்தயத்தை வறுத்துப் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்தவுடன் கடுகை சேர்த்து வெடிக்க விட்டு, அதனுடன் கேரட் துருவலை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேரட் நன்றாக சுருங்கி வந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
மசாலாவில் பச்சை வாசனை போனதும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, கரைத்த புளியை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இந்த கலவையானது கெட்டியாக சுருண்டு வரும் வரையில் வேக விட்டு கடைசியாக அரைத்து வைத்த வெந்தயம், பெருங்காயப் பொடியையும் போட்டுக் கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தலான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கேரட் தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |