முட்டையை பச்சையாக குடிப்பது உங்கள் உடலுக்கு நல்லதா? இனி இதையும் கொஞ்சம் கவனியுங்கள்!
முட்டை எமது அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் ஒரு சத்தான உணவுதான் ஆனால் அதை பச்சையாக குடிப்பது நன்மையா? தீமையா என்று இது நாள் வரையிலும் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
முட்டையின் நன்மைகள்
ஒரு முட்டையில் எமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் Dமற்றும் கல்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டால் எமது உடம்பு பலமானதாக மாறும்.
மேலும், எமது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி போன்ற வகையான சத்துக்களும் உள்ளன.
அதுமட்டுமல்லாது தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.
முட்டையை பச்சையாக குடிக்கலாமா?
நம் முன்னோர்கள் பெண்கள் பருவமடைந்து விட்டால் முட்டையை வேக வைக்காமல் அப்படியே பச்சையாக கொடுப்பார்கள்.
அதற்குப் பின்னால் அவர்கள் பல காரணங்கள் சொல்வார்கள். உடல் வலிமையாகும், எதிர்காலத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழவைக்கும் என சொல்லி சொல்லி விடியக் காலையில் பச்சை முட்டையை வாயில் ஊற்றுவார்கள். ஆனால் இப்படி பச்சை முட்டையை சாப்பிடுவது உடலுக்கு சரியில்லையாம்.
அதாவது சமைத்த முட்டையை விட பச்சை முட்டையில் அதிகம் புரோட்டின் இருந்தாலும் அது நமது உடலுக்கு 50 சதவீதம் புரோட்டின் மட்டும் தான் நன்மையைத் தருமாம்.
அதுவே சமைத்த முட்டையை சாப்பிடும் போது 90 சதவீதம் புரோட்டின் கிடைக்குமாம். அது மட்டுமில்லாமல் பச்சை முட்டையில் சால்மோனெல்லா எனும் பாக்ரீரியா கிருமி இருக்கிறது.
ஆகவே முட்டையை சமைத்து சாப்பிட்டால் மாத்திரம் தான் இது அழிந்து போகும். பச்சைமுட்டையை அப்படியே குடித்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி, டைபாய்டு போன்ற நோய்கள் வந்து விடும்.
அதிலும் குறிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், வயதானவர்களும் பச்சை முட்டையை குடிக்கவே கூடாது.