பால் மட்டுமே சேர்த்த கல்யாண வீட்டு பிரட் அல்வா! 10 நிமிடத்தில் செய்யலாம்..
கல்யாண வீடுகளில் தரப்படும் இனிப்புகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தது பிரட் அல்வா தான்.
நெய் மணமணக்க வாயில் வைத்தாலே கரைந்துவிடும் பிரட் அல்வாவின் ருசியே அலாதியானது.
வெறும் பால், பிரட் மட்டுமே வைத்து கல்யாண வீட்டு சுவையில் மிக எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரை லிட்டர்- பால்
சர்க்கரை- முக்கால் கப்
தண்ணீர்- கால் கப்
பிரட்- 8
முந்திரி- 10
உலர் திராட்சை- 15 முதல் 20
நெய்- 4 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அரை லிட்டர் பாலை எடுத்து நன்றாக காய்ச்சி எடுக்கவும். அவ்வப்போது கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும், பால் கொதித்து குறைந்ததும் அடிபிடிக்காமலும், கட்டிகள் ஏதும் இல்லாமல் கிளறி எடுத்துக்கொள்ளவும்.
8 பிரெட்டுகளை துண்டு துண்டாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர்திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் அரைத்து எடுத்த பிரெட் தூளை போட்டு வறுக்கவும், கருகிப்போகாமல் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பிரெட் தூளை சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றியதும் காய்ச்சு வைத்த பால் சேர்த்து கிளறிவிடவும்.
கடைசியில் 2 டீஸ்பூன் நெய், வறுத்து வைத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்தால் கல்யாண வீட்டு பிரெட் அல்வா தயாராகிவிடும்!!!
