ஆளி விதைகளை ஏன் சாப்பிட வேண்டும்? இதன் முக்கியமான பக்கவிளைவு பற்றி தெரியுமா?
ஆளி விதைகள் என்றழைக்கப்படும் Flax Seeds-களில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆளி செடி
Linum என்ற இனத்தில் Linaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்த பயிர் இதுவாகும், நிமிர்ந்து நேராக வளரும் 120 செமீ உயரத் தண்டு, மெல்லிய ஊசி வடிவில் 2-4 செ.மீ. நீளமும் 3மிமீ அகலமுள்ள நீலப் பச்சை நிற இலைகள்,
5 நீல நிற இதழ்களாலான மலர், உருண்டையான வறண்ட வில்லை வடிவில் 5-9 மிமீ விட்டமும் 4-7 மிமீ நீளமும் உள்ள விதைகள் கொண்ட காய்கள் இருக்கும்.
ஆளி விதைகள்
பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக் கூடிய விதைகள், மிகவும் கடினமாகவும், மேற்பகுதி மொறுமொறுவெனவும் இருக்கும்.
பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, கனிமச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது.
நன்மைகள்
- நமது உடலில் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதுடன், உயர் ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்துகிறது.
- பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
- இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை கரைக்கிறது.
- பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை சீராக்குகிறது, தினமும் இதனை உட்கொண்டு வந்தால் முடி கொட்டுவது நிற்கும்.
- ஆளி விதைகளில் நிறைந்துள்ள லிக்னன்கள், உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
ஆளி விதைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும், இல்லையென்றால் அதன் பலன் முழுமையாக உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும்.
எனவே, பெரும்பாலும் ஊறவைத்தோ, அல்லது அரைத்துப் பொடியாகவோ உண்ணப்படுகிறது.
ஆளிவிதை பொடியை பூரி, சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
அல்லது இந்தப் பொடியை தயிர், சாலட், ஓட்ஸ் கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
பக்கவிளைவுகள்
ஆளி விதைகள் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, இரைப்பை பாதையை டைத்துக் கொண்டு மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.
மேலும் குறிப்பாக பச்சையான மற்றும் பழுக்காத ஆளி விதை உட்கொள்ளுவதற்கு பாதுகாப்பற்றது எனக் கருதப்படுகிறது.
ஆளி விதைகளின் ஈஸ்ட்ரோஜென் போன்ற விளைவுகளின் காரணமாக, கர்ப்ப காலம் அல்லது பால் ஊட்டும் காலங்களில், அதனை எடுத்துக் கொள்ளக்கூடாது.
சர்க்கரை நோயாளிகள் ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர்களின் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது.