சத்தான குதிரைவாலி கருப்பட்டி அப்பம்: செய்து பார்ப்போமா?
நாம் உண்ணும் உணவுகள் சுவையானதாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் சிறுதானியங்களில் அதிக விட்டமின்களும் தாதுப் பொருட்களும் நிறைந்துள்ளன.
ஆனால், பெரும்பாலானோருக்கு தானியங்கள் உண்பதில் அதிக நாட்டமில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இதைப்போல் வித்தியாசமான உணவுகளை செய்துகொடுக்கலாம். இதில் குதிரைவாலி கருப்பட்டி அப்பம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி - 100 கிராம்
உளுந்து - 25 கிராம்
இட்லி அரிசி - 100 கிராம்
கருப்பட்டி - 200 கிராம்
இளநீர் - 1/2 கப்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, இட்லி அரிசி, வெந்தயம் இவையனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறியபின் அரைத்துக் கொள்ளவும்.
இளநீரை முதல் நாள் வாங்கி வைத்து புளிக்க வைக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மாவுடன் இளநீரை சேர்த்து 6 மணிநேரம் புளிக்க விடவும்.
அதன்பின்னர் கருப்பட்டியில் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவேண்டும். அது நன்றாக கொதித்ததன் பின்னர் சூடாக வடிகட்டி புளிக்க வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.
அதற்கடுத்ததாக அப்பச் சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுற்றி எடுத்து மூடி வேக விடவும்.
சத்தான குதிரைவாலி கருப்பட்டி அப்பம் பரிமாறத் தயார்.