கல்வியை ஆயுதமாக்கி... அடக்குமுறைகளை தகர்த்தெறிந்தவர் அண்ணல் அம்பேத்கர்!
தீண்டாமை, மூட நம்பிக்கைகள், அடக்குமுறைகள் என்பவை காலம் காலமாக நம் மக்களிடையே இருந்து வந்தது. தற்போதைய காலத்தில் அது சற்று குறைவு என்றாலும் முன்பெல்லாம் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த தீண்டாமை ஒரு காலத்தில் தலைவிரித்தாடியது.
இவற்றையெல்லாம் உடைத்தெறிந்தார் அம்பேத்கர் அவர்கள். 5 வயதில் சாதிய ஒடுக்குமுறையினால் பாடசாலையிலிருந்து விரட்டப்பட்ட சிறுவன், தனது 50 ஆவது வயதில் உலகின் அதிக பக்கங்களை உடைய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, அறிஞர் அம்பேத்கராக அழியாப் புகழ் பெற்றார்.
image - your story
பிறப்பு
1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி இந்தியாவின் மத்திய மாநிலத்தில் உள்ள மகோ என்ற கிராமத்தில் பிறந்தார் அம்பேத்கர் அவர்கள்.
இவரது இயற்பெயர் பீம் ராவ் அம்பேத்கர். தந்தையின் பெயர் ராம் ஜீ மகோ. இவர் ராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அம்பேத்கர் பிறந்து இரண்டு வருடங்களின் பின்னர் தனது வேலையை விட்டு மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தின் தபோலி கிராமத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு சாதி அடிப்படையிலான அடக்குமுறைகள் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு தனது பிள்ளைகளுக்கான கல்வி பாதிப்படையும் எனக் கருதி மும்பைக்கு இடம் பெயர்ந்தனர்.
image - the navhinds times
பள்ளியில் அமர்வதற்குக் கூட சாக்கு துணி ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் ஏனென்றால் தாழ்ந்த சாதியினர் அமர்வதால் தீட்டு ஏற்படும் என்னும் அடக்குமுறை. ஏனைய மாணவர்களுக்கு வழங்கும் உணவு, நீர் என்பவற்றைக்கூட இவருக்கு வழங்க மறுத்து மனம் நோகச் செய்தார்கள்.
கல்வியினால் இந்த அடக்குமுறைகளை ஒழிக்கலாம் என்று புரிந்துகொண்டு வெறி கொண்டு கல்வி கற்றார். பிறப்பினால் ஒருவரது உரிமைகள் எந்தளவுக்கு பறிக்கப்படுகின்றது என்பதைக் கண்டு கோபப்பட்டார்.
இதனால் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தி வெளியூர்களுக்குச் சென்ற உயர்கல்வி கற்று, பல சாதனைகளைப் படைத்தார். வாழ்நாள் முழுவதும் அடக்குமுறைக்கு எதிராக கல்வியை ஆயுதமாக கொண்டு போராடிய மிகச்சிறந்த தலைவர் இவர்.
அமெரிக்கா சென்று கல்வி கற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவரையே சாரும்.
கல்வி சாதனை
சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டத்தை இங்கிலாந்தில் பெற்றிருந்தார். அரசியல், பொருளியல், சட்டம், தத்துவம் போன்றவற்றில் மாமேதையாக திகழ்ந்தார்.
அதிக நூல்களைக் கற்ற ஒரே தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தனது வாழ்விடத்தை படிப்பகங்களுக்கு அருகே அமையவேண்டும் என விரும்புவாராம். இரண்டு கரங்களாலும் எழுதும் திறன் கொண்டவர்.
அரசியலமைப்பின் தந்தை
நாட்டின் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து இந்தியாவின் சட்டத்துறை அமைச்சரானார். சுதந்திரம், கல்வி, அடக்குமுறைகள், சம உரிமைகள், பெண்கள் உரிமைகள் தொடர்பாக இருந்த தவறான நடைமுறைகளை மாற்றி 300 பக்கங்களையுடைய மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்டத்தை தனி மனிதனாக பாடுபட்டு உருவாக்கினார்.
அன்று கல்வி உரிமை மறுக்கப்பட்டது. ஆனால், எதிர்காலத்தில் ஒரு பாராளுமன்றமே இவரது வருகைக்காய் காத்திருந்தது.
பணிகள்
சட்ட ரீதியாக அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வெற்றி கண்டார். பெண்கள் உரிமைகள் தொடர்பான சட்டம், சுரங்க தொழிலில் பெண்களை ஈடுபடுத்தக்கூடாது எனும் சட்டம்.
அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை சம்பளத்தோடு வழங்க வேண்டும் என்ற சட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை உருவாக்கினார். 'The problem of rubee' என்ற புத்தக்ததை எழுதி பிற்காலத்தில் இந்தியாவின் மிகப் பெரும் பொருளாதார நிறுவனமான 'Reseve bank of india' உருவாக காரணமாய் இருந்தார்.
image - news ncr
இறப்பு
இவ்வாறு பல பேருக்கு முன்னுதாரணமாய் விளங்கிய அம்பேத்கர் அவர்கள், 1956ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதி டெல்லியில் வைத்து உறக்கத்திலேயே உயிர் நீத்தார்.
அம்பேத்கர் அவர்கள் உதிர்த்த சில பொன்மொழிகள்....
- தன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி!
- சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!
- கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது!
- ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை!
- நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையெனில் அச் சமூகத்தின் முதல் சாபக்கேடு நீதான்.
- ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை! அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம்!
- தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வை மரத்துப்போகச் செய்கிறது.
- ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப் போவதில்லை!
- தனக்கு அநீதி இழைக்கபட்டதை உணரக்கூட முடியாதவன் மனிதனே அல்ல!
- எதை சொல்லி உன்னை அசிங்கப்படுத்த நினைக்கின்றானோ, அதையே உன் ஆயுதமாக்கு!
- அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடிவரும்.
- நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை.