திருமண மோசடி வழக்கில் மீண்டும் சிக்குகிறாரா ஆர்யா... சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு!
நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 70 லட்ச ரூபாய் பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 10 ஆம் தேதி ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, கடந்த 24 ஆம் தேதி ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனால், இந்த வழக்கிற்கும் ஆர்யாவிற்கும் தொடர்பில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதான இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனு ரத்து செய்ய வாதிட்டபோது வழக்கை வியாழக்கிழமை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்பின்னர், ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் 3-வது மற்றும் 4 ஆவது குற்றவாளி என கூறிய அவர், முதல் குற்றவாளியாக ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் கைது செய்யாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜெர்மனி பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆர்யா மீது மோசடி புகார் அளித்த நிலையில், ஆர்யா தன்னை போல நடித்து ஏமாற்றியதாக ஒரு புகாரும் அளிக்கவில்லை எனவும் கைது செய்யப்பட்ட இருவர் மீது அவர் எந்த விதமான புகாரும் இதுவரை அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஜெர்மனி பெண்ணிடம் ஆர்யா வீடியோ காலில் பேசிய அனைத்து ஆதாரங்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாகவும், ஆர்யா பேசிய அனைத்து மெசேஜ்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனால், ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கூறினார்.