வீட்டிலேயே மணக்க மணக்க பாயாசம் செய்யணுமா? அப்போ இதை போட்டு ஒருமுறை செய்ங்க
ஆடி மாதம் வந்துவிட்டால், வீட்டில் திரவ உணவுகளான கூழ், பாயாசம் போன்றவை அடிக்கடி செய்யப்படும். இதன் வழியே மட்டும் இல்லாமல், ஆரோக்கியமும் சுவையும் ஒரே நேரத்தில் பெற முடிகிறது.
பாயாசம் என்றாலே, அனைத்து வீடுகளிலும் தவறாமல் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை. ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் இதன் செய்முறை சிறிய மாற்றங்களுடன் இருக்கிறது.
சிலர் பருப்புடன், சிலர் சாமை அரிசியுடன், சிலர் வெல்லத்துடன். என பல வகைகளில் செய்வது வழக்கம். இந்த பதிவில் இந்த ஆடி மாத ஸ்பெஷலுக்கு சற்று வித்தியாசமாக, புதிய சுவையை எப்படி பாயாசம் செய்யலாம் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை - 1 கப்
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1 ½ கப் (சுவைக்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்)
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- தேங்காய் - 1 மூடி
- முந்திரி - 5
- திராட்சை - 8
செய்முறை
முதலில் பொட்டுக்கடலையை வாணலியில் சிறிது வாசம் வரும் வரை வறுத்து, ஆறவைத்து மெலிதாக அரைக்கவும்.அந்தப் பொடியுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து பக்கத்தில் வைக்கவும்.
தேங்காயுடன் ஏலக்காயை சேர்த்து அரைத்து, நறுமணமான தேங்காய் பால் எடுத்து வைக்கவும். ஒரு சிறு பாத்திரத்தில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.பின் அதில் அரைத்த பொட்டுக்கடலை கலவையை சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும்.
அதனுடன் துருவிய வெல்லத்தை சேர்த்து கரையும்வரை கிளறவும். பின் தேங்காய் பால் (அல்லது விருப்பமாக பசும்பால்) சேர்த்து, நன்கு கலக்கவும். இறுதியாக, நெயில் வறுத்த முந்திரி & திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.
இனி நாவூறும் பொட்டுக்கடலை பாயாசம் ரெடி. இது வெறும் இனிப்பு அல்ல, ஆரோக்கியமும், பாரம்பரியத்தின் மகிமையும் மிக்க ஒரு சிறப்பு உணவு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |