உங்களுக்கு 40 வயதிற்கு மேல் ஆகிடுச்சா? அப்போ இந்த உணவுகளை தவிர்த்திடுங்க
இளம் வயதில் கல்லைத் தின்றாலும் செரிமானம் ஆகிவிடும் என்று சொல்வார்கள். 40ல் நிலைமை தலைகீழ். இடுப்பு பெருத்து, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என்று வரிசைகட்டும் நோய்கள் காரணமாக உணவில் கட்டுப்பாடு அவசியமாகிறது. இளம் வயதுக்கு நம்மால் திரும்பப் போக முடியாது. ஆனால் 40க்குப் பிறகு நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். அப்படி 40ஐ கடந்தவர்கள் எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்…
பொதுவாக சர்க்கரை நோய் வருவததைத் தவிர்க்க ஆர்டிஃபீஷியல் சர்க்கரையை பயன்படுத்துவார்கள். அது பசி உணர்வைத் தூண்டிவிடும். இதனால் கலோரி அளவு அதிகரித்துவிடும். இதுவே உடல் பருமன், சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும். சர்க்கரையை தவிர்க்க நினைப்பவர்கள் செயற்கை சர்க்கரையை நாட வேண்டாம். அதற்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் தேன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
தண்ணீருக்கு பதில் சோடா, கார்பனேட்டட் குளிர்பானங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள நச்சுக்கள் புற்றுநோய் முதல் பல்வேறு வியாதிகள் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட, செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதில் அதிக உப்பு, ரசாயனம் இருக்கும். இவை இதயத்துக்கு பாதிப்பாக மாறிவிடும்.
பழச்சாறு (ஜூஸ்) அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் பழமாக சாப்பிடலாம். ஜூஸ் ஆக சாப்பிடும்போது அதில் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படும். கலோரி அளவு அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மில்க் ஷேக் உள்ளிட்டவையும் நல்லது இல்லை.
துரித உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்துக்கு இரண்டு, மூன்றுக்கும் மேற்பட்ட முறை துரித உணவு சாப்பிடுபவர்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனப்படும் இன்சுலினுக்கு எதிராக உடல் செயல்படும் திறனை அதிகரிக்க செய்து சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.
பால் அருந்தலாம். பால் பொருட்கள் சரியானது இல்லை. வெண்ணெய், சீஸ், பனீர் போன்றவை இன்னும் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் தன்மை கொண்டது. எனவே, அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இந்த உணவுகளை எல்லாம் முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. குறைத்துக்கொள்வது நல்லது. வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒரு முறை என்று எப்போதாவது சாப்பிடுவதால் பாதிப்பு வந்துவிடாது.