திருமணத்திற்காக சைக்கிளில் பயணம்! வைரலான இளைஞரின் பின்னணி
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து மணப்பெண்ணுக்கு தாலிகட்டியுள்ளார் சிவசூர்யா.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவசூர்யா (28). இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும் ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்தும் பொதுமக்களிடையே அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்தை நேற்று கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில் சிவசூர்யா தனது திருமணத்திற்கு கார், வேன் என வாகனத்தில் செல்லாமல் சைக்கிளிலில் செல்ல முடிவு செய்தார்.
கோவையில் இருந்து குருவாயூர் வரை சைக்கிளிலேயே செல்ல திட்டமிட்ட அவர், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.
கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து சனிக்கிழமை மாலை சென்றடைந்தார்.
இன்று காலை குருவாயூர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா-அஞ்சனா திருமணம் நடைபெற்றது.
உடல் ஆரோக்கியத்தில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக மணமகன் சிவசூர்யா கூறியுள்ளார்.