இளம்வயதில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர்கள்: இதனைத் தடுக்க வழி என்ன? நிபுணர்களின் எச்சரிக்கை பதிவு
கன்னட திரையுலகில் ‘ஃபிட்னஸ் ப்ரிக்' ஆக இருந்த நடிகர்கள் சிரஞ்சீவி சர்ஜா, புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் அர்ஜூனின் அக்கா மகன்சிரஞ்சீவி சர்ஜா (36), கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, வரும் வழியிலேயே சிரஞ்சீவி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நடிகர் புனித் ராஜ்குமாரும் இவ்வாறு ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார்.
அதுமட்டுமின்றி நடிகர் சேதுராமன் இளம்வயதில் மாரடைப்பினால் மரணமடைந்து பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இவ்வாறு பிரபலங்கள் மட்டுமின்றி பாமர மக்களுக்கும் இளம்வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணம் என்பது பலரது கேள்வியாக இருக்கின்றது.
உடற்பயிற்சின் போது மாரடைப்பு ஏன்?
மிகவும் மென்மையான இதயம் கடுமையான உடற்பயிற்சி செய்வதால் செயலிழக்கும் நிலை ஏற்படுகின்றது.
ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் இதயம் பலவீனம் அடைகிறது.
தொடர்ச்சியாக கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் இதய வால்வுகள் கூடுதல் தடிமனாகவும், அதில் அடைப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனாலேயே அதிகமான எடை தூக்குவது, இடைவெளி இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றால் நெஞ்சுவலி, திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
ஏற்கெனவே இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
30 நிமிடங்கள் அளவுக்கு மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வதும், நமது அன்றாட பணிகளை நாமே செய்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இவை எல்லாவற்றையும் விட மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலே மாரடைப்பு ஏற்படாது என்று பிரபல மருத்துவர் கூறியுள்ளார்.
இதய ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
- இதய ஆரோக்கியத்திற்கு, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் அடிப்படைத் தேவையாக இருக்கின்றது.
- 18 வயது, 20 வயது போன்ற வயதிலெல்லாம் ஏற்படும் இதயப்பிரச்சினைகள் மரபுவழி சிக்கலாகவே இருக்கும்.
- தாய் தந்தை யாருக்கேனும் இதயப்பிரச்சினை இருந்தால், பிள்ளைகளுக்கு கூடுதல் கவனம் அளிக்க வேண்டுமாம்.
- ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- இளவயது மாரடைப்பு மற்றொரு முக்கிய காரணம் அதீத உடல் பருமன்.
- உயரத்திற்கேற்ப எடையைப் பராமரிக்க வேண்டும்; பி.எம்.ஐ அளவைக் கணக்கிடுவதன் மூலம் இதை உறுதி செய்யலாம்.
- அமர்ந்தபடியே வேலை செய்ய வேண்டியுள்ளவர்கள், குறிப்பிட்ட மணி நேரத்துக்கு ஒருமுறை இடைவெளி எடுத்து, அருகருகே நடப்பது நல்லது.
- புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தை விடுவதே இப்பிரச்சினைகளுக்கு முதலும் முக்கியமான தீர்வாகும்.
- அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், ஃபாஸ்ட்புட், பதப்படுத்திய உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.