குட்டிக்காக உயிரை பணயம் வைத்து போராடிய தாய் யாக் : பனிச்சிறுத்தையை விரட்டிய பரபரப்பு காட்சி!
இமயமலையின் பனியால் மூடப்பட்ட உயரமான மலைகளில், ஒரு பனிச்சிறுத்தை யாக் மந்தையின் ஒரு குட்டியை வேட்டையாட முட்பட்ட போது தாய் யாக் தனது குட்டியை காப்பாற்ற பனிச்சிறுத்தையுடன் போராடிய காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே இமயமலையின் கடுமையான சூழலில் யாக் மந்தையில் உள்ள குட்டிகளை காக்க பெரிய யாக்குகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும். காரணம் இங்கு காணப்படும் பனிச்சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகளிடமிருந்து தங்களின் குட்டிகளை காப்பாற்ற வேண்டிய சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

பனிச்சிறுத்தை தனியாகவே வேட்டையாடும். சரியான நேரத்தை காத்திருந்து திடீரென தாக்கும். ஆனால் யாக்குகளைத் தாக்குவது எளிதான காரியம் அல்ல. ஒரு பெரிய யாக் தனது கொம்புகளாலும் வலிமையாலும் பனிச்சிறுத்தையை கடுமையாகக் காயப்படுத்த முடியும்.
ஆபத்து நெருங்குவதை உணர்ந்தவுடன், யாக்குகள் ஓடிவிடுவதில்லை. அவை ஒன்றாகச் சேர்ந்து குட்டிகளை நடுவில் நிறுத்தி பாதுகாப்பு வளையம் உருவாக்குகின்றன. தேவைப்பட்டால், பெரிய யாக்குகள் நேரடியாக எதிரியை நோக்கிப் பாயவும் செய்யும்.

அதனால் இந்த மோதல் வெறும் வேட்டையாடி மற்றும் இரை இடையிலான போராட்டம் மட்டுமல்ல.இது புத்திசாலித்தனம், வலிமை, குழு ஒற்றுமை ஆகியவற்றின் மோதலாகும். சில நேரங்களில் பனிச்சிறுத்தை வெற்றி பெறலாம்.
ஆனால் பல சமயங்களில், யாக் மந்தையின் ஒற்றுமையும் துணிச்சலும் அதை பின்வாங்கச் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் இந்த காணொளியிலும் நிகழ்ந்துள்ளது. பனிச்சிறுத்தையும் தனது குட்டிகளுக்கு உணவளிக்கும் நோக்கத்துடன் தான் வேட்டையில் இறங்கியது.
ஆனால் யாக் மந்தையில் ஒரு குட்டியை குறிவைத்ததும் அதன் தாய் ஆக்குரோஷத்துடன் தனது கொம்புகளால் தாக்கி சிறுத்தையை விரட்டியுள்ளது. ஒரு புறம் யாக் தனது குட்டியை காப்பாற்ற போராடி வென்றது.
அதே நேரம் பனிச்சிறுத்தை உயிர் பிழைக்கவும் தனது குட்டிகளுக்கு உணவளிக்கவும் வேட்டைக்கு சென்று தோல்வியடைந்தது.
எனவே இந்த உலகில் போராட்டம் என்பது அனைத்து தரப்புக்கும் இருக்கத்தான் செய்கின்றது, உயிர்பிழைப்பதற்கான போராட்டமே வாழ்க்கை என்பதை இந்த காணொளி பறைசாற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |