‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு– சரத்குமாரின் புதிய யோசனை
sarathkumar : ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது அடையாளமாக இருக்கும் என்றும், அவ்வாறு பச்சை குத்திக் கொண்டால் தன்னை எளிதாக நேரடியாக சந்திக்கலாம் என்றும் நடிகர் சரத்குமார் பேசியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு
நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அவரது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சரத்குமார் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது குடும்ப அடையாளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்வது நமது அடையாளம். நமது குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு குடும்ப அடையாளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது” என்று கூறினார்.
மேலும், தன்னை சந்திக்க விரும்பும் ஆதரவாளர்களுக்கு எளிதான அணுகலை ஏற்படுத்தும் வகையில் இந்த அடையாளத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கிரீன் கார்டு போன்று ஒன்றை வழங்கலாம் என நினைத்தேன். ஆனால், பச்சை குத்திக் கொண்டால் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமாக அது இருக்கும்.

கையில் அந்த பச்சை இருந்தால் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். அதேவேளை, பச்சை குத்திக் கொள்வது யாருக்கும் கட்டாயம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே, உரிய மருத்துவர் ஆலோசனையைப் பெற்று பச்சை குத்திக் கொள்ளலாம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சரத்குமாரின் இந்தப் பேச்சு தொடர்பான காணொளி மற்றும் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், ‘நாட்டாமை குடும்பம்’ என்ற அடையாளத்தை உருவாக்குவது தொடர்பான அவரது கருத்து இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |