1318 ஆண்டுகள் பழமையான ஹோட்டல்...52 தலைமுறைகளாக கவனிக்கும் ஒரே குடும்பம்
விடுமுறை நாட்களில் எங்கேனும் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால், நமக்கு ஏற்றாற்போல் வசதியான ஒரு இடத்தை தேடுவோம்.
நன்றாக சுற்றிப் பார்க்க, ஓய்வெடுக்க, நாம் கொண்டு சென்ற பொருட்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்க என ஹோட்டல்களைப் பயன்படுத்துவோம். அப்படிப்பட்ட ஒரு ஹோட்டல்தான் ஜப்பானில் அமைந்துள்ளது.
இந்த ஹோட்டலானது சுமார் 1318 ஆண்டுகள் பழைமையானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த ஹோட்டலின் பெயர் நியிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன்.
இந்த ஹோட்டலானது உலகிலேயே மிகவும் பழைமையான மற்றும் தொடர்ந்து இயங்கும் ஹோட்டல் என்று கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.
கி.பி. 705இல் புஜிவாரா மஹிடோ என்பவரால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தின் முக்கிய பிரபலங்களான சாமுராய் முதல் ஏ - லிஸ்ட் பிரபலங்கள் என்று கூறப்படும் அரச குடும்பம் மற்றும் அது சார்ந்த விருந்தினர்கள் தங்கும் இடமாக இது காணப்படுகின்றது.
பழைய ஹோட்டல் என்றாலும் கால மாற்றத்துக்கு ஏற்ற அனைத்தும் இதில் உள்ளது. இதில் மொத்தமாக 37 அறைகள் உள்ளன.
இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் 1300 வருடங்களுக்கும் மேலாக இந்த விடுதியை 52 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நிர்வகித்து வருகின்றனர் என்பதாகும்.