105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பெண்: உங்களால் நம்ப முடிகின்றதா?
வீடு என்பது வெறும் கல், மண் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் அல்ல. அது ஒவ்வொருவருடைய உணர்ச்சி சம்பந்தப்பட்டது.
தாம் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஒரே வீட்டில் வசிக்கவேண்டும் என பலருக்கும் ஆசை, கனவு இருக்கும். ஆனால், உண்மையிலேயே ஒரு மனிதனால் ஒரே இடத்தில் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்?
முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஒருவர்.
எல்சி ஆல்கிளாக் என்ற பெண்மணி பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் 1918ஆம் ஆண்டில் ஹத்வைட்டில் உள்ள பார்க்கர் தெருவில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் பிறந்துள்ளார்.
image -itvx
105 வயதாகும் எல்சிக்கு, இரண்டு குழந்தைகள், 6 பேரக் குழந்தைகள், 14 கொள்ளு பேரன்கள், 11 எள்ளு பேரன்களும் உள்ளனர்.
இன்னும் சில நாட்களில் தனது 105 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ள அந்த பெண்மணி, தான் 105 வருடங்கள் வாழ்ந்த அதே வீட்டில் கொண்டாடப் போகின்றார் என்பதுதான் ஹைலட்.
தற்போது வரையில் இரண்டு உலகப் போர்கள், நிலவில் மனிதன் கால் வைத்த தருணம், பெருந்தொற்று என அனைத்தையுமே இப் பெண்மணி சந்தித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 22 பிரதமர்கள் 5 முடியாட்சிகள் ஆகியவற்றையும் கண்டுள்ளார்.
இவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். 1941ஆம் வருடம் இவருக்கு திருமணம் நடந்ததன் பின்னரும் இவர் அதே வீட்டில் வசித்துள்ளார்.
இதைப் பற்றி கடந்த வருடம் எல்சி அளித்த பேட்டியில், “அந்தக் காலத்தில் 250 பவுண்டுகள் கடன் வாங்கி இந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டோம். இதில் நாங்கள் பெரிதாக எந்த மாற்றமும் செய்ததில்லை. ஆனால், இங்கு இருப்பதை விட வேறு எங்கேயும் நான் சந்தோஷமாக இருந்ததில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
image - ladbible
கணவர் இறந்ததன் பின்னர் தனது மகனான ரேவுடன் கடந்த 26 வருடங்களுக்கு இந்தப் பெண்மணி வாழ்ந்து வருகிறார்.
தனது தாயைப் பற்றி கூறிய ரே, தனது தாய் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.