உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன? வாழ்வில் பிரச்சினையே இருக்காது!
இருமனம் இணைவதுதான் திருமணம். அந்தத் திருமணத்தில் தங்களது துணையின் தேவைகள் என்னவென்பதை அறிந்து நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு அந்த தேவைகள், ஆசைகள் அதிகமாகவே இருக்கும். தங்களது கணவன் தம்மை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஒரே ஆசை.
ஆதரவு
எந்தவொரு சூழ்நிலையிலும் கணவன் தனக்கு துணையாக இருக்கவேண்டும் என்பதையே மனைவி விரும்புவாள். வாழ்வில் தனக்கு என்ன நேர்ந்தாலும் கணவன் இருக்கின்றார் என்ற உணர்வை அவளுக்கு கொடுக்க வேண்டும்.
நான் இருக்கின்றேன் என்ற எண்ணத்தை கணவன் மனைவிக்கு கொடுக்க வேண்டும். குடும்பத்தில் மனைவி, மருமகள், அம்மா என்று பல உறவுகளாக இருப்பதால் கணவனின் ஆதரவு மனைவிக்கு நிச்சயம் தேவை.
மரியாதை
உறவுகளுக்குள் மரியாதை மிகவும் முக்கியமானது. கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும்.
மனைவிதானே என்று நினைத்து மரியாதை குறைவாக நடத்தாமல் அவளது உணர்வுகளையும் மதித்து, அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். மரியாதை இருந்தால்தான் எந்தவொரு உறவும் நீடிக்கும்.
கவனம்
தன் கணவனின் கவனம் தன் மீது இருக்க வேண்டுமென எந்தவொரு மனைவியும் விரும்புவாள். நீங்கள் அவள் மீது அன்பையும் பாசத்தையும் பொழிய வேண்டுமென அவள் விரும்புகிறாள். இதனால் அவர்கள் தங்களை மதிப்புக்குரியவர்களாகவும் பாராட்டப்பட்டவர்களாகவும் உணர்வார்கள்.
நேரம் செலவழியுங்கள்
ஆண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும் தன் மனைவியுடன் நேரம் செலவழிப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். இது வாழ்க்கையை அழகாக மாற்றும்.
தொடர்பு வைத்திருங்கள்
ஒரு உறவுடன் தொடர்பில் இருந்தால்தான் அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள், அவர்களின் தேவை என்ன என்பதெல்லாம் தெரியும். எனவே மனைவியிடம் இடைவெளி விட்டு விடாமல் சீரான தொடர்பை பேணுங்கள்.
நம்பிக்கை
நம்பிக்கைதான் ஒரு உறவுக்கு அடிப்படையானது. உங்கள் மனைவியிடம் நம்பகமானவராகவும் நேர்மையானவராகவும் வெளிப்படையானவராகவும் நடந்துகொள்ள வேண்டும்.