கணவர் மயங்கி விழுந்ததாக மருத்துவரிடம் கூறிய மனைவி... விசாரணையில் தூக்க மாத்திரையால் நடுங்க வைத்த கொலை
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்பதி சீனிவாசன் (35), பிரபா. இவர்களுக்கு கனிஷ்கா என்ற மகள் உள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீனிவாசனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, பிரபா அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். பின்னர் அவரது உறவினர் மாரிமுத்து என்பவர் மருத்துவமனைக்கு வந்து சீனிவாசனின் உடலை பார்த்தபோது, கழுத்தில் காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து மாரிமுத்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனடிப்படையில் பிரபாவை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கணவர் சீனிவாசன் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகாத வார்தையால் பேசி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தனக்குத் தெரிந்த குமாரபாளையத்தைச் சேர்ந்த சலூன் கடை வெள்ளியங்கிரி, புரோட்டா மாஸ்டர் சரவணக்குமார் ஆகிய இருவர் உதவியுடன், கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, பிரபா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.