மனைவிக்காக உயிரை விட்ட கணவன்! சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்
தமிழகத்தில் திருமணமான சில மாதத்தில் மனைவியை காப்பாற்ற தன்னுடைய உயிரை கணவர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஷ்மா (26). சாப்ட்வேர் என்ஜினீயர். டெல்லியை சேர்ந்தவர் ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சுஷ்மாவும் ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஷியா முக்கும் சுஷ்மாவுக்கும் தலை தீபாவளி என்பதால் அதனை கொண்டாடுவதற்காக பார்வதிபுரத்திற்கு வந்திருந்தனர். தலை தீபாவளியை கொண்டாடிய இவர்கள் நேற்று காலை காளிகேசம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர்.
அந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது சுஷ்மா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.
இதையடுத்து சுஷ்மா கூச்சலிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சுஷ்மா தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். மனைவியை காப்பாற்றுவதற்காக ஷியாம் ஆற்றில் குதித்தார். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சூழலில் சிக்கிக்கொண்டார். இவருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் தண்ணீரில் இருந்த சூழலில் இருந்து ஷியாமால் வெளியே வர முடியவில்லை.
ஆனால் சுஷ்மா அந்த பகுதியில் உள்ள செடி ஒன்றை பிடித்துக் கொண்டு கரைக்கு பத்திரமாக வந்தார்.மனைவி கண்ணெதிரே ஷாயாம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷியாம் பிணமாக மீட்கப்பட்டார். ஷியாம் உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுதார். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்