கொரோனாவால் உயிரிழந்த தந்தை.. சில மணிநேரத்திலேயே பிள்ளைகளுக்கு காத்திருந்த பேரிடி
கொரோனாவினால் கணவர் உயிரிழந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்துள்ள சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அண்ணாநகர் கொல்லைமேடு பகுதியில் வசித்து வந்தவர் பிச்சாண்டி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அகிலா என்ற 23 வயது மகளும், வசந்தகுமார், விமல் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
பிச்சாண்டி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இதற்கிடையே அவரது மனைவி செல்விக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த பிச்சாண்டிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனே மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கணவர் இறந்தது கூட தெரியாமல், அவர் இறந்து சில மணிகளில் அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
