உங்களது விரல் நகங்கள் வெள்ளையாக இருந்தால் இதுதான் அர்த்தமா?
நகங்களைப் பராமரிப்பது, அழகு நிலையம் அல்லது நெயில் சலூனுக்கு செல்வதை விட மிகவும் முக்கியம். உடலின் இந்தப் பகுதியானது உங்கள் உடல்நலம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிவிக்கிறது.
எனவே, நகங்களின் நிறம் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நகங்களில் புள்ளிகள் அல்லது அவை உடைதல் அல்லது வேறு ஏதாவது அறிகுறிகள் தோன்றுவது, வரவிருக்கும் நோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.
இப்படி ஏற்பட்டால் ஒரு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. இதனால் மருத்துவர் நோயாளியின் நிலையை ரத்த பரிசோதனைகள் மற்றும் பிற முறைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும். மேலும் தீவிரமான சந்தேகம் ஏற்பட்டால், நிபுணர் ஒரு பயாப்சி மேற்கொள்ளும்படி கேட்கலாம்.
நம் உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை பாதிக்கும் நோய்களும் உள்ளன. பெரும்பாலான உடல்நலப் பிரச்னைகள் சிறுநீரகம், தோல், கல்லீரல், நாளமில்லா சுரப்பி (எண்டோகிரைன் சுரப்பி), ஊட்டச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

நல்ல விஷயம் என்னவென்றால், நகத்தின் எந்த ஒரு மாற்றமும் எப்போதும் கடுமையான உடல்நலப் பிரச்னையைக் குறிக்கும் என்பது இல்லை. சில சமயங்களில் இது சாதாரணமாகவும் ஏற்படுகிறது.
"கால் நகங்கள் அவ்வளவு நன்றாக பராமரிக்கப்படுவதில்லை என்பதால் சில நேரங்களில் அவற்றில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, அவை மஞ்சள் நிறமாகி, கரடுமுரடானதாக மாறும்" என்கிறார் தோல் மருத்துவர் வலேரியா சானெல்லா ஃபிரான்சென்.
வெள்ளை நகங்கள்
தனது நகங்களில் ஏதேனும் அசாதாரண மாற்றம் ஏற்படுவதாக யாராவது உணர்ந்தால், முதலில் அதன் நிறத்தைப் பார்க்க வேண்டும்.
நகத்தின் நிறம் வெண்மையாக இருந்தால், அது மைக்கோசிஸ், சொரியாசிஸ், நிமோனியா மற்றும் இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த புரத உணவு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
"நகங்கள் நிறமிழந்தால் அது ரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் இரும்புச்சத்து இல்லாமல் இருந்தால் நகங்கள் ஸ்பூன் வடிவமாகவும், குழிவாகவும் இருக்கும்," என்று சரும மருத்துவ நிபுணர் ஜூலியானா பிக்வெட் கூறுகிறார்.
நகங்களில் வெள்ளைத்திட்டுகள் தோன்றும் லுகோனிகியா போன்ற ஒரு நிலையும் உள்ளது. ஆனால் அது எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. அவை உடலில் எந்த மாற்றத்தையும் குறிக்காது.
இந்த நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவர்கள் பொதுவாக நோயாளிகளிடமிருந்து பிரச்சினையின் உண்மையான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள்.
உங்கள் நகங்களின் நிறம் வெண்மையாகத் தெரிய ஆரம்பித்தால், தோல் மருத்துவரிடம் சென்று, அவர் ஏதேனும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும்படி சொன்னால் கண்டிப்பாகச் செய்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரைத் தொடர்புகொள்ளலாம்.