இனி இதை செய்யமாட்டோம்.. வாட்ஸ் அப் நிறுவனம் நீதிமன்றத்தில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் கொண்டு வந்த தனியுரிமை கொள்கை சட்டம் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வாட்ஸ் அப் தங்களது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் தனியுரிமை கொள்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வாட்ஸ் அப் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், வாட்ஸ் அப் தனது புதிய கொள்களைகளை தற்போதைக்கு அமல்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காத பயனர்களின் வாட்ஸ் அப் செயலி எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டம் ஆகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அடிக்கடி வாட்ஸ் அப்பில் கொள்கையை ஏற்றுக்கொள்ள நினைவூட்டல் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.