வாட்ஸ் அப்பில் தெரியாத எண்ணிலிருந்து வரும் புகைப்படங்கள்! மொத்த பணத்தை இழக்கலாம்
புகைப்படத்தை வைத்து நடைபெறும் புதிய வாட்ஸ்அப் மோசடியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ் அப்
இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.
இதற்கு வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கின்றது. பணம் செலுத்துதல், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஒரே செல்போனில் இருந்து உருவாக்கிக்கொள்ளும் வசதி என்று பல புதிய அம்சங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது.
ஆனால் தெரியாத நம்பரிலிருந்து வரும் புகைப்படத்தினால் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் காலியாகிவிடும் என்ற எச்சரிக்கை தற்போது எழுந்துள்ளது.
இந்த மோசடி புகைப்படங்களில் மறைக்கப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் போனுக்குள் நுழைகிறது. தொலைத்தொடர்புத் துறையும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய மோசடி
மோசடி செய்பவர்கள் வாட்ஸ் அப் அல்லது பிற மெசேஜிங் பயன்பாடு மூலம் புகைப்படங்களை அனுப்புகின்றனர். சில தருணங்களில் புகைப்படங்களில் உள்ள நபர்களை அடையாளம் காட்ட கேட்பது போன்று அழைப்பு வருமாம்.
நீங்கள் அந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தவுடன் உங்கள் மொபைல் போன் செயலிழந்து, மோசடி செய்பவர்களுக்கு உங்கள் சாதனத்திற்குள் நுழைய வழி கிடைக்கிறது.
மக்கள் தற்போது ஓடிபி மற்றும் தவறான URL குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதால் மோசடி செய்பவர்கள் புகைப்படங்களில் மறைக்கப்பட்ட இணைப்புகளை பயன்படுத்தும் தந்திர முறையினை கையாள்வதாக சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு ஸ்டெகனோகிராபி என்று பெயர்.
ஸ்டெகனோகிராபி என்பது கண்டறிவதைத் தவிர்ப்பதற்காக ஒரு செய்தியில் அல்லது உறுதியான பொருளில் தரவை மறைக்கும் செயல்முறையாகும்.
உரை, புகைப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் இசை போன்ற பல டிஜிட்டல் உள்ளடக்க வகைகளில் தரவை மறைக்க முடியும். மோசடி செய்பவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி படங்களில் தீங்கு விளைவிக்கும் இணைப்புகளைச் செருகுகிறார்கள்.
இதனை நாம் க்ளிக் செய்யும் போது மொபைலிலிருந்து அனுமதி இல்லாமல் பணத்தை எடுததுக் கொள்ள முடியுமாம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தெரியாத எண்ணிலிருந்து வரும் குரல் செய்தி, வீடியோ அல்ல படத்தினை பதிவிறக்கம் செய்யக்கூடாது. மேலும் அசாதாரணமாக பெரிதாக தோன்றும் படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.
ஏனெனில் அவை ஆபத்தான பயன்பாடுகளுக்கான இணைப்புகளைக் கொண்டிருக்கலாம். உங்கள் வங்கி கணக்கையும் வாட்ஸ்அப் எண்ணையும் தனித்தனியாக வைத்திருங்கள்.
1930 என்ற எண்ணில் உள்ள சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு இது போன்ற சம்பவங்களை cybercrime இணையதளத்தில் புகாரளிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |