இணையத்தை ஆக்கிரமிக்கும் சீசன் ரெசிபி: நாவில் எச்சில் ஊறும் மாங்காய் சட்னி
மாங்காய் சீசனில் பல மாங்காய் செசிபிகள் இருக்கின்றன. இருந்தும் ஒரு சிலவை மக்களுக்கு பிடித்துப்போக அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அப்படி தான் இன்றும் ஒரு மாங்காய் சட்னி ரெசிபி வைரலாகி வருகின்றது. இதை வைரல் மாங்காய் சட்னி என்றும் சொல்லலாம். இந்தச் சட்னியை செய்வது எளிது. ஆனால் சுவையோ பிரமாதம். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- மாங்காய் – 1
- தக்காளி – 2
- பூண்டு – 8 பல்
- பச்சை மிளகாய் – 2
- உப்பு – தேவையான அளவு
- மல்லித்தழை – சிறிதளவு
- பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் இரண்டாக நறுக்கிய தக்காளி மற்றும் இரண்டாக நறுக்கிய மாங்காய் இரண்டை மட்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் இவற்றை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி எடுத்து ஆறவைக்கவேண்டும். ஆறியவுடன் மாங்காய் மற்றும் தக்காளியில் உள்ள தோலை நீக்கவேண்டும்.
பின்னர் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனுடன், பெரிய வெங்காயம், மிளகாய்த் தூள், மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அந்த சட்னியில் சேர்த்தால் சுவையான வைரல் மாங்காய்ச் சட்னி தயார். இதை எந்த உணவுடனும் உங்களுக்கு பிடித்தவாறு வைத்து சாப்பிடலாம்.