விநாயகி என்ற பெண் தெய்வம் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஆகஸ்ட் மாத இறுதியில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்போதெல்லாம், கிரிக்கெட் விநாயகர், நடன விநாயகர், கொரோனா விநாயகர், என வித்தியாசமான விநாயக வடிவங்கள் அந்தந்த சமயங்களில் பேசப்படுவதுண்டு.
ஆனால், விநாயகரைத் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு விநாயகியைத் தெரியும்? ஆம் , விநாயகி, கணேஷினி, பிள்ளையாரினி என்று அழைக்கப்படும் பெண் வடிவ பிள்ளையார் சிலைகளும் உண்டு. அதிகம் அறியப்படாத அல்லது பிரபலமடையாத இந்த பெண் விநாயக சிலைகள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி, கையில் வளையல்களுடன், கழுத்துக்கு மேல் யானை முகத்துடன் இருக்கும், இந்த விநாயகி சிற்பங்கள் தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் காணப்படுகின்றன.
விநாயகி என்ற பெயர்
ஏராளமான பெயர்களால் குறிக்கப்பட்டாலும், விநாயகி என்ற பெயர் பொதுவான பெயராக அறியப்படுகிறது. யானைத் தலையுடன் பெண் உடல் கொண்ட இந்த உருவங்கள் ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயரில் அறியப்படுகின்றன. இந்து மதத்தின் 64 யோகினிகளின் பெயர் பட்டியலில்தான், தனி கடவுளாக, 'விநாயகி' என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது என்று "கடவுள் விநாயகி - பெண் கணேஷா" என்ற நூலில் பி.கே.அக்ரவாலா குறிப்பிடுகிறார்.

KEERTHIK SASIDHARAN / TWITTER
இதே பெயரில் புத்த மத இலக்கியங்களிலும் ஒரு தெய்வம் குறிப்பிடப்படுகிறது என்று ஆய்வாளர் முண்ட்கர் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இந்த விநாயகி சிற்பங்கள் பிரபலமாக அறியப்படுகின்றன. அதில் சில விநாயகி சிற்பங்கள் இவை:
1. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருக்கும் விநாயகி சிலை. இது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
2. ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் இருக்கும் விநாயகி சிலை. இந்த சிலையும் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
3. மத்திய பிரதேசம் மாண்டசூர் பகுதியைச் சேர்ந்த விநாயகியின் சிலை. இதன் தும்பிக்கை மற்றும் கைகள் உடைக்கப்பட்டிருப்பதையும் இந்தப் படத்தில் காண முடியும்.
இதேபோன்ற விநாயகி சிற்பங்கள் தமிழ்நாட்டிலும் சில கோயில்களில் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன.

KEERTHIK SASIDHARAN
தமிழ்நாட்டில் எங்கு?
கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசித்தபடி, விநாயகி சிற்பம், புடைப்புச்சிறபமாகக் காணப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலில் ஒரு தூணில் விநாயகியின் சிற்பம் காணப்படுகிறது.
சுசீந்தரத்தில் இருக்கும் இந்த விநாயகி சிற்பம் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தன் விநாயகி நூலிலும் குறிப்பிட்டுள்ளார் பி.கே.அக்ரவாலா.
இதேபோல, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் விநாயகத்தாரணி என்ற பெயரில் பெண் விநாயகர் உருவம் காணப்படுகிறது. ஆனால், இந்த விநாயகியின் கால்கள் புலிக்கால்கள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே, இது வியாக்ரபாத விநாயகி (புலிக்கால் விநாயகி) என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், ஈரோடு பவானியிலும், திருநெல்வேலி வாசுதேவநல்லூரிலும் விநாயகி சிற்பங்கள் காணப்படுகின்றன.

Getty Images