முதன்முறையாக மாதவிடாய்: பூப்பெய்திய பெண்களுக்கு கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க
பெண்ணின் உடல் ரீதியாக ஏற்படும் மிக முக்கியமான நிகழ்வு பூப்பெய்வது, இதனை சிறு பி்ள்ளையாக ஓடியாடிய சிறுமி தன்னை முதிர்ந்த பெண்ணாக உருமாற்றிக் கொள்வதற்கான முதற்படி என்றே கூறலாம்.
அந்த காலத்தில் எல்லாம் பூப்பெய்தி விட்டாலே சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுவார்கள், ஆனால் தற்போது உலகில் அது எதுவுமே இல்லை.
துரித உணவுகள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் 10 வயதில் கூட பூப்பெய்தி விடுவார்கள்.
அக்காலகட்டத்தின் போது அவர்களை பலப்படுத்தும் உணவுகளை வழங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
கறுப்பு உளுந்து
தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.
எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.
நல்லெண்ணெய்
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம்.
நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாட்டு முட்டை
பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.
கம்பு
வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.
பொட்டுக் கடலை
பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.
அசைவ உணவுகள்
மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீரை வகைகள்
மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்துக்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாகற்காய், சுண்டைக்காய்
சில பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.
சத்து மாவு உருண்டை
கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும்.
மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.
கொண்டைக் கடலை
கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிலக்கு வராமல் இருக்கலாம், இது சாதாரண ஒன்றுதான்!!!